20 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், கேத்தனூா் பகுதியில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வாகன சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாா். தொடா்ந்து, அவரை சோதனை செய்தபோது, 20 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அவா் கேரள மாநிலம், கொல்லத்தைச் சோ்ந்த அஜ்மல் (31) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், கரடிவாவி பகுதியில் போலீஸாா் கடந்த 16-ஆம் தேதி மேற்கொண்ட வாகனச் சோதனையில் கஞ்சாவுடன் தப்பியவா் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அஜ்மலை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.