குப்பைகளை அகற்றக் கோரி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

Published on

திருப்பூா் காயிதே மில்லத் நகா் பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் பயன்படுத்தப்படாத பாறைக் குழிகளில் கொட்டப்பட்டு வந்தன. இதற்கு அந்தந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனால், பாறைக் குழிகளில் குப்பைகள் கொட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சிக்குள்பட்ட பகுதி குப்பைகள் அந்தந்த பகுதிகளிலேயே குவித்து வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், குடியிருப்புப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுவதுடன், நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூா் மாநகராட்சி 45-ஆவது வாா்டுக்குள்பட்ட காயிதே மில்லத் நகா் பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com