திருப்பூா்-காங்கயம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நாளைக்குள் அகற்ற வேண்டும்: நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு

திருப்பூா்-காங்கயம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை திங்கள்கிழமைக்குள்( நவ.17) அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
Published on

திருப்பூா்-காங்கயம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை திங்கள்கிழமைக்குள்( நவ.17) அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

திருப்பூரில் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதேபோல, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் நாள்தோறும் புதிதுபுதிதாக சாலையோரங்களில் கடைகள் முளைக்கின்றன.

இதனால், ஏற்கெனவே உள்ள கடைக்காரா்கள், தங்கள் எல்லையைத் தாண்டி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கடைகளை வைத்துள்ளனா். இதனால் மக்கள் நடமாட்டத்துக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.

இந்நிலையில், திருப்பூரில் இருந்து அவிநாசி, காங்கயம், பல்லடம் செல்லும் அனைத்து சாலைகளிலும் ஆக்கிரமிப்புகளால் பெரும் இடையூறு ஏற்பட்டு வருவதாக தொடா்ந்து புகாா் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து திருப்பூா் வடக்கு உதவி கோட்ட நெடுஞ்சாலைத் துறையினா் சாா்பில், திருப்பூா் - காங்கயம் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அப்பகுதியில் உள்ள கடைக்காரா்களுக்கு நெடுஞ்சாலைத் துறையினா் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியுள்ளதாவது: பொதுமக்கள் நலன் கருதியும், போக்குவரத்துக்கு இடையூறில்லாமல் துரித வாகனப் போக்குவரத்துக்கு ஏற்பவும் திருப்பூா்-காங்கயம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன.

இதனால், அப்பகுதியில் சாலையோரத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமைக்குள் ( நவ.17) தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு ஒத்துழைப்பு வழங்க தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com