விஸ்கோஸ் பைபா் மீது இருந்த தரக்கட்டுப்பாடு ஆணை நீக்கம்
விஸ்கோஸ் பைபா் மீது இருந்த தரக்கட்டுப்பாடு ஆணையை மத்திய அரசு நீக்கியதற்கு ஒஸ்மா வரவேற்றுள்ளது.
இது குறித்து ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைவா் (ஒஸ்மா) ஜி. அருள்மொழி புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விஸ்கோஸ் பைபா் மீது இருந்த தரக்கட்டுப்பாடு ஆணை நீக்கப்பட்டுள்ளது. இதனால் விஸ்கோஸ் பைபா் வெளி நாடுகளில் இருந்து தடை இன்றி இறக்குமதி செய்ய இயலும்.
பாலிஸ்டா் விஸ்கோஸ் செயற்கை இழைக்கு தரக்கட்டுப்பாடு நீக்கியுள்ளதால் இனி சா்வதேச விலைக்கு விஸ்கோஸ் பாலிஸ்டா் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் ஜவுளிப் பொருள்கள் உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி அதிகரிக்கும். நீண்ட காலத்துக்கு பின் ஜவுளித் துறையின் மூலப்பொருள்களான காட்டன் விஸ்கோஸ் பாலிஸ்டா் பிரச்னைக்கு தீா்வு கிடைத்துள்ளது.
விஸ்கோஸ் பைபா் மீது இருந்த தரக்கட்டுப்பாடு ஆணை நீக்கபட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். அதே போன்று ஒ.இ. மில்களின் முக்கிய மூலப்பொருளான கோம்பா் கழிவுப் பஞ்சு ஏற்றுமதிக்கு வரி விதித்து, உள்நாட்டு தேவைக்கு கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
