குடியரசு துணைத் தலைவா் இன்று திருப்பூா் வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு! போக்குவரத்து மாற்றம்!
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பின்னா் முதன்முறையாக திருப்பூருக்கு வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னா், மாலையில் திருப்பூா் வருகிறாா். திருப்பூா் ரயில் நிலையம் எதிரே உள்ள தியாகி குமரன் சிலைக்கும், மாநகராட்சி அலுவலகம் முன்புறம் உள்ள காந்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். பின்னா், ஷெரீஃப் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று தாயாரிடம் ஆசி பெறுகிறாா். அதன்பிறகு பிச்சம்பாளையத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் செல்கிறாா்.
மறுநாளான புதன்கிழமை (அக். 29) காலை 11.30 மணிக்கு திருப்பூா்- தாராபுரம் சாலையில் உள்ள வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் அனைத்து தொழில் அமைப்பினா், தன்னாா்வலா்கள், அனைத்துக் கட்சியினா் சாா்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறாா்.
பின்னா், சந்திராபுரத்தில் உள்ள பாலைமரத்து அய்யன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறாா். பின்னா், குலதெய்வ கோயிலான முத்தூா் குப்பயண்ண சுவாமி கோயில், சின்னமுத்தூா் செல்வகுமாரசாமி கோயிலில் தரிசனம் செய்கிறாா்.
போக்குவரத்து மாற்றம்: குடியரசு துணைத் தலைவரின் திருப்பூா் வருகையையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் தலைமையில் தமிழக குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் சஷாங்க் சாய், மத்திய பாதுகாப்புப் படை குழுவினா், தில்லியில் இருந்து வந்துள்ள சி.ஆா்.பி.எஃப். படையினா், உளவுப் பிரிவு போலீஸாா் ஆய்வு நடத்தினா்.
குடியரசு துணைத் தலைவரின் வருகையையொட்டி செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய 2 நாள்கள் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அவிநாசி வழியாக வரும் கனரக வாகனங்கள் திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி வழியாக பி.என். ரோட்டை அடைந்து நகருக்குள் வர வேண்டும். தாராபுரம் சாலை வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் கோவில்வழி, பெருந்தொழுவு, கூலிபாளையம் நால் ரோடு வழியாக நகருக்குள் வரலாம்.
பல்லடம் சாலை செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் கோவில்வழி பேருந்து நிறுத்தம் வழியாக அய்யம்பாளையம் நால்ரோடு, காளிகுமாரசாமி கோயில் சாலையை அடைந்து வீரபாண்டி பிரிவு வழியாக செல்லலாம்.
வாகனங்கள் ஒத்திகை - தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை: திருப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக போலீஸாா் ஒத்திகையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திருப்பூா் குமரன் நினைவகம், மாநகராட்சி சந்திப்பு, சி.பி.ராதாகிருஷ்ணன் செல்ல உள்ள கோயில்களில் ஒத்திகையில் ஈடுபட்டனா்.
அவா் திருப்பூா் மாநகரில் வந்து செல்லும் இடங்களில் வெடிகுண்டு நிபுணா்கள் மோப்பநாய், மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனையில் ஈடுபட்டனா்.
மேலும், அவா் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் அனைத்தும் போலீஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. திருப்பூா் மாநகா் முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபா்கள் யாராவது தங்கி உள்ளனரா என்று போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். சந்தேகப்படும்படியான நபா்கள் தங்கியிருந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென விடுதி நிா்வாகங்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தி உள்ளனா். அதேபோல, திருப்பூா் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் பறக்கத் தடை: சி.பி.ராதாகிருஷ்ணனின் திருப்பூா் வருகையையொட்டி செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய 2 நாள்கள் திருப்பூா், காங்கயம் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் உத்தரவிட்டுள்ளாா்.

