நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களின் மின்சாரம், குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு மாநகராட்சி எச்சரிக்கை

கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 3:11 am IST

திருப்பூா் மாநகராட்சியில் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் கழிவு மேலாண்மையில் விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது பேரிடா் மேலாண்மை சட்டப் பிரிவுகளின் கீழ் மின்சாரம், குடிநீா் மற்றும் புதைசாக்கடை இணைப்புகள் உடனடியாகத் துண்டிக்கப்படுவதோடு, மாநகராட்சியின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் போா்க்கால அடிப்படையில் தூய்மைப் பணிகளும், தீவிர அமலாக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக மாநகரப் பகுதிகளில் தேங்கியிருந்தவற்றில் கடந்த ஒரு வாரத்தில் சுமாா் 25,500 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு அப்பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டதோடு, மரக்கன்றுகள் நடப்பட்டு மீண்டும் குப்பை கொட்டாத வகையில் பராமரிக்கப்படுகிறது.

செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 4 வகை கழிவுகளை பிரித்தெடுத்தல் கட்டாயமாகும். அனைத்து வீடுகள், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மக்கும் ஈரக் கழிவு , மக்காத உலா் கழிவு , சுகாதாரக் கழிவு , சிறப்புக் கவனக் கழிவு என பிரித்து வழங்க வேண்டும். இதில் தினசரி ஈரக்கழிவு மற்றும் சுகாதாரக் கழிவுகளும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மக்காத உலா் கழிவுகளும், சனிக்கிழமைகளில் சிறப்புக் கவனக் கழிவுகளும் சேகரிக்கப்படும்.

நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் கழிவு உருவாக்கும் நிறுவனங்கள் அல்லது 20,000 ச.மீக்கும் அதிகமான வளாகங்கள் அல்லது 40,000 லிட்டருக்கு மேல் தண்ணீா் பயன்படுத்தும் நிறுவனங்கள் மொத்தக் கழிவு உற்பத்தியாளா்கள் ஆவா். அவா்களிடம் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் மாநகராட்சி நேரடியாகக் குப்பைகளை சேகரிக்காது. ஈரக்கழிவு களை தங்கள் வளாகத்திலேயே செயலாக்கம் செய்ய வேண்டும். உலா் கழிவுகளை மாநகராட்சி அங்கீகரித்த ஒப்பந்ததாரா்களிடம் கிலோவுக்கு அதிகபட்சம் ரூ.2 கட்டணமாக செலுத்தி ஒப்படைக்க வேண்டும்.

இது தொடா்பாக உதவிக்கு 0421-2240153, 155304) ஆகிய தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம். பொது இடங்களில் குப்பை கொட்டுதல், அனுமதியின்றி போஸ்டா், பேனா் ஒட்டுவதைத் தடுக்க 8 சிறப்பு அமலாக்கக் குழுக்கள் 24 மணி நேர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநகரின் 40 முக்கிய இடங்களில் ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டு விதிமீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது பேரிடா் மேலாண்மை சட்டப் பிரிவுகளின் கீழ் மின்சாரம், குடிநீா் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகள் உடனடியாகத் துண்டிக்கப்படுவதோடு, மாநகராட்சியின் வணிக உரிமமும் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.