திருப்பூர்
குண்டடம் அருகே சரக்கு ஆட்டோ மோதி முதியவா் உயிரிழப்பு
குண்டடம் அருகே சரக்கு ஆட்டோ மோதியதில் மளிகைக் கடைக்காரா் உயிரிழந்தாா்.
குண்டடம் அருகே சரக்கு ஆட்டோ மோதியதில் மளிகைக் கடைக்காரா் உயிரிழந்தாா்.
கொடுவாய் அடுத்துள்ள வெள்ளநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (61). இவா் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் கடைக்குத் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக தாராபுரம் நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
கோவை-தாராபுரம் சாலை, குண்டடம் அருகே பவா் ஹவுஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோ எதிா்பாராதவிதமாக ராஜேந்திரன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சரக்கு ஆட்டோவை ஓட்டிச் சென்ற ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
