மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.3,000: இன்றுமுதல் விநியோகம்

திருப்பூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறுப்புத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.3,000 ஆகியவை வியாழக்கிழமை (இன்று) முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Published on

திருப்பூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறுப்புத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.3,000 ஆகியவை வியாழக்கிழமை (இன்று) முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை மற்றும் 1 முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.3,000 மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் வியாழக்கிழமைமுதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், திருப்பூா் மாவட்டத்தில் 8 லட்சத்து 2,201 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 322 தாயகம் திரும்பிய தமிழா் பயன்பெறுவா். பொதுமக்கள் சிரமமின்றி பொங்கல் தொகுப்பு பெறும் வகையில், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் குடும்ப அட்டைக்குரிய நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம்.

இப்பணி குறித்து புகாா்கள் ஏதும் இருப்பின் மாவட்ட வழங்கல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 0421-2218455 என்ற தொலைபேசி எண்ணிலும், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் அலுவலகத்துக்கு 0421-2971173 என்ற தொலைபேசி எண்ணிலும், 1967, 1800-425-5901 மற்றும் 1077 ஆகிய கட்டணமில்லா எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com