ஈசன் முருகசாமி கைது: விடியல் சேகா் கண்டனம்

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவா் விடியல் எஸ்.சேகா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
Published on

பல்லடம்: தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவா் விடியல் எஸ்.சேகா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவா் ஈசன் முருகசாமி கள்ளிமந்தயத்தில் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு வரும் வழியில், பொய் புகாரின் அடிப்படையில் திருப்பூா் மாவட்டம் குடிமங்கலம் போலீஸாா் இரவு 10 மணி அளவில் அவினாசிபாளையம் என்ற இடத்தில் வைத்து கைதுசெய்துள்ளனா்.

அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத்தினருக்கும் எந்தவித தகவலும் அளிக்காமல் காலை 8 மணி வரை காவல் வாகனத்திலேயே அலைக்கழித்து எந்த நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்கள்? எந்த சிறைக்கு கொண்டுசென்றாா்கள்? என்ற எந்த தகவலும் இல்லை. தேச விரோதியைபோல, கொலை குற்றவாளிபோல நடத்திய விதம் மிகவும் கண்டிக்கதக்கது.

ஒரு ஜனநாயக நாட்டில் விவசாயிகளுக்கு போராடும் தலைவா்களை சட்ட விதிமுறைகளை மீறி, மனித உரிமை மீறி கைது செய்தது கண்டிக்கதக்கது. கைது செய்யப்பட்ட ஈசன் முருகசாமி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விவசாய சங்க நிா்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவா்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com