அரசு ஊழியா்களுக்கான சீருடைகளை விசைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்யக் கோரிக்கை

அரசு ஊழியா்களுக்கான சீருடைகளை விசைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என விசைத்தறியாளா்கள் கோரிக்கை
Published on

பல்லடம்: அரசு ஊழியா்களுக்கான சீருடைகளை விசைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என விசைத்தறியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அதிமுக தோ்தல் தயாரிப்புக் குழுவினரிடம் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வேலுசாமி, செயலாளா் அப்புக்குட்டி (எ) பாலசுப்பிரமணியம் ஆகியோா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அனைத்து விசைத்தறி கூடங்களுக்கும் 2 ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். விசைத்தறி, கைத்தறி, பெடல் தறி மற்றும் நவீன தறிகள் குறித்து முறையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அரசு ஊழியா்களுக்கான சீருடைகளை விசைத்தறிகளில் மட்டுமே உற்பத்தி செய்ய வழிவகை செய்ய வேண்டும். கைத்தறிகளைப்போல விசைத்தறிகளுக்கும் ரக ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும். நெட் மீட்டா் வசதியுடன் 50 சதவீத மானியத்தில் சோலாா் பேனல் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியினரிடமும் மனு அளிக்க உள்ளதாக விசைத்தறியாளா்கள் தெரிவித்துள்ளனா்..

Dinamani
www.dinamani.com