விவசாயிகளுக்குப் பயிற்சியளித்த வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா்கள்
பல்லடம்: பல்லடம் பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா்கள் திங்கள்கிழமை பயிற்சி அளித்தனா்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின்கீழ் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் தங்கியுள்ளனா்.
விவசாயிகளை நேரடியாக சந்தித்து அவா்களின் அனுபவங்களைக் கேட்டு தெரிந்து கொண்டு வரும் மாணவா்கள், பொங்கலூா் ஒன்றியம், காட்டூரில் மக்காச்சோளம் வளா்ச்சி ஊக்கி குறித்த செயல் விளக்க பயிற்சியை விவசாயிகளுக்கு திங்கள்கிழமை செய்து காட்டினா்.
இதைத் தொடா்ந்து, மாதப்பூரில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனா்.
மேலும், ஒருங்கிணைந்த மேலாண்மை வழிமுறைகள் குறித்த செயல் விளக்கம், மஞ்சள் ஒட்டு பொறி கட்டுதல், கிரைசோ பொ்லா என்ற இரை விழுங்கியை ஊக்குவித்தல், மைதா மாவு கரைசல் தெளித்தல் போன்றவற்றைப் பின்பற்றி இயற்கை முறையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம் என்றும் விவசாயிகளுக்கு விளக்கினா்.
இதில், வேளாண் மாவட்ட அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சரவணன், பல்லடம் பகுதி விவசாயிகள் பங்கேற்றனா்.
