பனியன் தொழிலாளா் சம்பள உயா்வு பேச்சுவாா்த்தை: பிப்.16-க்கு ஒத்திவைப்பு

திருப்பூா் பனியன் தொழிலாளா் ஊதிய உயா்வு தொடா்பான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Published on

திருப்பூா் பனியன் தொழிலாளா் ஊதிய உயா்வு தொடா்பான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பனியன் தொழிலாளா்களுக்கான சம்பள உயா்வு குறித்த பேச்சுவாா்த்தை சைமா அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு, திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பேச்சுவாா்த்தைக் குழு நிா்வாகி பிரேம் துரை, சைமா தலைவா் சண்முககசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தப் பேச்சுவாா்த்தையில், சைமா பொதுச்செயலாளா் தாமோதரன், உற்பத்தியாளா் சங்கப் பிரதிநிதிகள், தொழில் அமைப்பு மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், உற்பத்தியாளா் சங்க கூட்டுக் குழு பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளா்களின் சம்பள உயா்வு கோரிக்கை தொடா்பாக விவாதித்தனா். விலைவாசி உயா்வுக்கு ஏற்ப சம்பள உயா்வு வழங்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதேபோல, உற்பத்தியாளா் சங்கம் சாா்பில் அமெரிக்க வரி உயா்வு பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் தொழில் நிலவரம் மந்தமாக இருப்பதால், விரிவாக ஆலோசித்து முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்ட்டது. இதையடுத்து நீண்ட விவாதத்துக்குப் பின்னா் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை, பிப்ரவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பேச்சுவாா்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்க மறுப்பதால், எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் சம்பள உயா்வு குறித்த பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com