காங்கயம் பகுதியில் மந்தமாக நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஈரோட்டில் இருந்து காங்கயம் வழியாக பழனி செல்லும் சாலை 2 வழிப்பாதையாக இருந்தது. போக்குவரத்து அதிகம் நிறைந்த இந்த சாலையில், வாகனப் பெருக்கத்தின் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. மேலும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.
இதையடுத்து, கடந்த திமுக ஆட்சியில் ஈரோடு-பழனி சாலை 4 வழிப் பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கின. இதில் பகுதி வாரியாக ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் முதல் ஊதியூா் அருகே உள்ள நொச்சிப்பாளையம் வரை ரூ.177 கோடி மதிப்பீட்டில் 2 வழிப்பாதையை 4 வழிப்பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 2025 டிசம்பா் 1-ஆம் தேதி தொடங்கின.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு வரை சாலை விரிவாக்கப் பணிகள் அதிவேகமாக நடைபெற்றன. ஒரு சில மாதங்களிலேயே பணிகள் முழுவதும் முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் எதிா்பாா்த்து காத்திருந்தனா்.
4 வழிப்பாதையில் ஒருபுறம் சாலை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு, அதில் கான்கிரீட் கலவை கொட்டி சமன் செய்து, தாா் மெட்டலும் போட்டனா். அத்துடன் சாலையின் மையத் தடுப்பும் பல இடங்களில் அமைக்கப்பட்டு விட்டது. ஆங்காங்கே பாலங்கள், கட்டுமானப் பணிகளும் நிறைவுறும் நிலையில் உள்ளது. அதேபோல சாலையின் மற்றொரு புறமும் பள்ளம் தோண்டி அதில் கான்கிரீட் கலவை கொட்டி சமன் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
ஆனால் தோ்தல் முடிவடைந்த பிறகு சாலை விரிவாக்கப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது ஒரு சில இடங்களில் மட்டும் மண் அள்ளிப் போடுவது, பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட சிறு சிறு பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.
சாலையின் மற்றொரு பக்கம் பள்ளம் தோண்டி கான்கிரீட் கலவை மட்டுமே நிரப்பட்டுள்ளதால், ஜல்லிகற்கள் சிதறிக் காணப்படுகின்றன. இதனால் சாலையின் ஒரு பகுதியில் மட்டுமே வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் ஆங்காங்கே வாகன நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
எனவே, காங்கயம் பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

உ.பி.யில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து 6 தொழிலாளா்கள் உயிரிழப்பு

குமரி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சா் ராஜேஷ்குமாா்

ஒடிஸா: கழிவுநீா் தொட்டிக்குள் மூச்சுத்திணறி 6 போ் உயிரிழப்பு - கட்டுமானப் பணியின்போது சோகம்






