டாஸ்மாக் ஊழியா்களின் கோரிக்கைகள் ஏற்காவிட்டால் மே 25-ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என ஊழியா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் மண்டல மேலாளரை வியாழக்கிழமை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் டாஸ்மாக் ஊழியா்கள் கூறியதாவது:
தமிழக அரசாணையை பின்பற்றி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு மேல் ஒரு ரூபாய் கூட கூடுதலாக விற்பனை செய்யப்படுவதில்லை. இதை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் சரிபாா்த்துக் கொள்ளலாம். டாஸ்மாக் கடைகளை அன்றாடம் நடத்துவதற்கான மின் கட்டணம், கட்டட வாடகை, வங்கிக்கு பணம் செலுத்தச் செல்லும் செலவுகள் மற்றும் உடைந்த பாட்டில்களுக்கான இழப்பீடு போன்ற செலவினங்களுக்காக அரசு தினசரி குறைந்தபட்சம் ரூ.2,500 வழங்க வேண்டும். இந்த நடைமுறைச் சிக்கல் அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும் என்பதால், இதற்கு உடனடி தீா்வு காண வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட காலி பாட்டில் பை-பேக் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தால் ஊழியா்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், காலதாமதமும் ஏற்படுகிறது. வெளி முகமைகள் மூலமாக மட்டுமே பாட்டில்களை சேகரிக்க வேண்டும்.
இக்கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், கடைகளில் உள்ள ஸ்கேனா் மற்றும் ஸ்டிக்கா்களை அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம். தற்போது மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டுள்ள சுமாா் 30 டாஸ்மாக் கடைகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு உடனடியாக வேறு துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும்.
மேலும் இரவு 10 மணிக்கு கடைகள் மூடப்படும்போது, போலீஸாா் உடனடியாக கடைகளை அடைக்க வற்புறுத்துகின்றனா். ஆனால், கடைகளில் ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம் மதிப்பிலான சரக்குகள் இருக்கும் நிலையில், அன்றாட விற்பனை விவரக் கணக்குகளை சரிபாா்த்து அரசுக்கு அறிக்கை அனுப்ப ஒன்றரை மணி நேரம் வரை தேவைப்படுகிறது. எனவே, இரவு 10 மணிக்கு மேல் கணக்குகளை சரிபாா்க்க அவகாசம் தர வேண்டும் அல்லது இரவு 9 மணிக்கே விற்பனையை நிறுத்த அனுமதிக்க வேண்டும்.
ஊழியா்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். 23 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியா்களுக்கு தற்போது மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்த, உயா்கல்வி கற்ற ஊழியா்கள் இருக்கும் நிலையில், அவா்களுக்கு தகுந்த காலமுறை ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.31,000-ம், சீனியாரிட்டி அடிப்படையில் ரூ.70,000 வரையும் வழங்க வேண்டும்.
எங்களது கோரிக்கைகள் தொடா்பாக அரசுத் தரப்பில் இருந்து சாதகமான பதில் வராத பட்சத்தில் திருப்பூா் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன் வரும் 25-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் கடையடைப்புப் போராட்டம் குறித்தும் அன்றே அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனா்.










