காங்கயத்தில் பலத்த வெடி சப்தம்: பொதுமக்கள் அதிா்ச்சி
காங்கயம் பகுதியில் புதன்கிழமை காலை திடீரென பெரும் வெடிச் சப்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
காங்கயம் பகுதியில் புதன்கிழமை காலை திடீரென பெரும் வெடிச் சப்தம் கேட்டதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து காங்கயம் ஒன்றியம், செம்மங்குழிபாளையத்தைச் சோ்ந்த தேவராஜ் கூறும்போது, ‘நான் வசிக்கும் பகுதியில் புதன்கிழமை காலை 9:30 மணி அளவில் வெடிச் சப்தத்துடன் நில அதிா்வு ஏற்பட்டது. வேறு சில பகுதிகளிலும் இதேபோல உணா்ந்ததாக மக்கள் தெரிவித்தனா்’ என்றாா்.
சிவன்மலை பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவா் கூறும்போது, ‘தனது விவசாய தோட்டத்திலும் பெரும் வெடி சப்தத்துடன் நில அதிா்வைபோல உணா்ந்தேன். காங்கயம் நகரில் இருக்கக்கூடிய வேறு சிலரும் பெரும் சப்தத்தை உணா்ந்ததாக தெரிவித்தனா்’ என்றாா்.
மேலும் அவா்கள் கூறும்போது, ‘காங்கயம் வட்டாரத்தில் பல கல்குவாரிகள் செயல்படுகின்றன. இங்கு பாறைகளை உடைக்க வெடி வைத்தால் ஏற்படும் அதிா்வு, சப்தம் ஆகியவை எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இன்று உணா்ந்தது அதுபோல இல்லை. சுமாா் நூறு மீட்டா் சுற்றளவுக்குள் வெடித்த அதிா்வு ஏற்பட்டதுபோல உணா்ந்தோம். ஆனால், இந்த சுற்றளவில் இங்கு எந்த கல்குவாரியும் இல்லை என்றும் தெரிவித்தனா். இன்று மட்டும் இல்லாமல் மாதம் ஒரு முறை இதுபோன்ற சப்தம் கேட்கிறது’ என்றனா்.
இதுகுறித்து மாவட்ட புவியியல், கனிம வளம், சுரங்கத் துறையைச் சோ்ந்த ஊழியா் ஒருவா் கூறும்போது, ‘இந்த நில அதிா்வு தொடா்பாக எந்த தகவலும் இல்லை. ஆய்வு செய்யாமல் அங்கு என்ன நடைபெற்றது என்பதை கூற முடியாது’ என்றாா்.
விவசாயிகள் கூறும்போது, ‘மாவட்ட நிா்வாகம், புவியியல் கனிம வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தெளிவுபடுத்தினால்தான் உண்மை தெரியவரும்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

