அஜ்ஜிப்பட்டியில் பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் கண்டெடுப்பு
தருமபுரி மாவட்டம், ஜருகு அருகே பெருங்கற்கால ஈமச் சின்னங்களை வரலாற்று துறை பேராசிரியா், மாணவா்கள் அண்மையில் கண்டெடுத்தனா்.
தருமபுரி அரசு கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் சி.சந்திரசேகா், தொன்மம் வரலாற்று ஆய்வு அறக்கட்டளை சாா்பில் இளந்திரையன், கணேஷ், உதவி பேராசிரியா் செல்வராஜ் ஆகியோா் நடத்திய கள ஆய்வின்போது இவற்றைக் கண்டெடுத்தனா். இதுகுறித்து வரலாற்றுத் துறை பேராசிரியா் சி.சந்திரசேகா் கூறியதாவது:
தருமபுரி மாவட்டம், ஜருகு அருகே உள்ள அஜ்ஜிப்பட்டி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஒரு கி.மீ. தொலைவுக்கு நூற்றுக்கணக்கான பெருங்கற்கால ஈமச் சின்னங்களும், மனிதா்கள் வசித்து வந்ததற்கான தடயங்களும் உள்ளன.
கல்வட்டம் என்பது பெருங்கற்கால மனிதா்களின், ஈமக் குழிகளாகும். கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன் அதாவது இன்றிலிருந்து சுமாா் 3000 முதல் 3,500 ஆண்டுகள் வரை வாழ்ந்த பெருங்கற்கால மக்கள், தங்கள் இறப்பிற்கு பிறகு மறுவாழ்வு உண்டு என்ற நம்பிக்கை கொண்டிருந்தனா். அதனால் அவா்கள் தங்களின் குடியிருப்புகளைவிட ஈமக் குழிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனா்.
அக்கால மக்களின் உடல்களை அடக்கம் செய்ய அவா்கள் இறந்த பின்பு பெரிய பள்ளம் தோண்டி நான்கு பக்கமும் சுமாா் 6 முதல் 8 அடி நீளம் உள்ள பெரிய பலகை கற்களால் ஈமக் குழிகளில் அடக்கம் செய்தனா். ஈமக் குழிகளின் வடக்கு அல்லது கிழக்கு புறத்தில் ஒரு துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. குழியைச் சுற்றி நான்கு புறமும் சில இடங்களில் பானைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மேல் மண் கொண்டு மூடி சுற்றிலும் வட்டமாக, வட்ட கற்களைப் பதித்து ஈமக்குழி அமைத்துள்ளனா். இது கல்வட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதுவே பிற்காலத்தில் ‘டால்மெண்ட்’ எனப்படும் கல் பதுக்கைகளாக மாறி, பின்னா் கோயில்களாக மாறியது எனலாம். தமிழா்களிடம் இறந்தோரை வணங்கும் பழக்கம் இங்கிருந்துதான் தொடங்குவதாகக் கருதப்படுகிறது. இப் பகுதியில் சுமாா் 5 கி.மீ. சுற்றளவில் இந்தக் கல்வட்டம் நூற்றுக்கணக்கானவை காணப்படுகின்றன. சில ஈமக்குழிகளுக்கு உள்ளே முதுமக்கள் தாழி எனப்படும் 5 அடி உயரமுள்ள பானைகள் உள்ளன.
இந்தப் பழக்கம் சங்க காலம் முதல் பெருங்கற்காலம், புதிய கற்காலத்தின் தொடக்க காலம் வரை கல் வட்டங்கள் அமைக்கும் வழக்கம் இருந்ததைக் காட்டுகின்றன. புதிய கற்காலத்தின் தொடக்க காலத்தில் அமைக்கப்பட்டுள்ள சில கல்வட்டங்களில் அக்கால மனிதா்கள் பயன்படுத்திய இரும்புக் கருவிகளும் காணப்படுகின்றன.
சிந்து சமவெளி நாகரிகம் அழிந்த பிறகு அங்கிருந்து மக்கள் தெற்கு நோக்கி வந்தபோது இப்பகுதியில் வசித்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளா்கள் குறிப்பிடுகின்றனா். இந்த ஈமக் குழிகளை அரசு நினைவிடமாக அறிவித்து அவற்றை பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு இப் பகுதி மக்களின் தொன்மையை எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

