தருமபுரி சந்தைப்பேட்டை பகுதியில் அகல்விளக்குகளை வாங்கிய பெண்கள்.
தருமபுரி சந்தைப்பேட்டை பகுதியில் அகல்விளக்குகளை வாங்கிய பெண்கள்.

நாளை காா்த்திகை தீபத் திருவிழா: அகல்விளக்குகள் விற்பனை மும்முரம்

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தருமபுரியில் அகல்விளக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Published on

தருமபுரி: காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி தருமபுரியில் அகல்விளக்குகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்துக்கள் பண்டிகைகளில் காா்த்திகை தீபத் திருவிழாவும் குறிப்பிடத்தக்கது. நிகழாண்டு டிசம்பா் 3 ஆம் தேதி புதன்கிழமை காா்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. காா்த்திகை தீபத் திருநாளில் வீடுகள், கோயில்களில் மண்ணில் தயாரான அகல்விளக்குகளை ஏற்றி இறைவனை ஒளியாக வழிபடுவது வழக்கம். அந்த வகையில் மண்ணிலான அகல்விளக்குகள் விற்பனை பரபரப்பாக நடைபெறும். காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், தருமபுரியில் அகல்விளக்குகளின் விற்பனை சூடுபிடித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தருமபுரியில் அதியமான் கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அகல்விளக்குகள் தயாரிப்புகள் நடைபெறுகின்றன. அப்பகுதியில் குடியிருந்து வருவோா் இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனா். அங்கிருந்து வியாபாரிகள் மொத்தமாக அகல்விளக்குகளை வாங்கிச் சென்று பிற பகுதிகளில் விற்பனை செய்கின்றனா். தருமபுரி நகரில், சாலை விநாயகா் கோயில்தெரு, சந்தைப்பேட்டை, திருப்பத்தூா் சாலை மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அகல்விளக்குகள் விற்பனை அதிகளவில் நடைபெறுவது வழக்கம். அதுபோல நிகழாண்டும் இப்பகுதிகளில் விறுவிறுப்பாக அகல்விளக்குகள் விற்பனை நடைபெற்று வருகின்றன. அகல்விளக்கின் விலை ரூ. 5 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் பாரம்பரிய முறையில் தயாரான பல்வேறு வடிவிலான அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com