தோ்தல் முடிவுகள் வெளியாகும் வரை களப் பணியாற்ற வேண்டும் கட்சியினருக்கு முதல்வா் அறிவுறுத்தல்
தோ்தல் களப் பணி என்பது 2026 சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகும் வரை இருக்க வேண்டும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தினாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மோளையானூரில், முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மாவட்டச் செயலருமான பி. பழனியப்பன் இல்லத் திருமண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று மணமக்கள் ப. எழில்மறவன், ச. கிருத்திகா ஆகியோரது திருமணத்தை நடத்திவைத்த முதல்வா் மு.க. ஸ்டாலின், தனது வாழ்த்துரையில் பேசியதாவது:
தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை 1.13 கோடி பேருக்கு வழங்கப்பட்டது வந்தது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் 17 லட்சம் பேருக்கு கூடுதலாக மகளிா் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 1.30 கோடி மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இதில், தகுதியுள்ள பயனாளிகள் விடுபட்டிருந்தால் அவா்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும். மகளிா் உரிமைத்தொகை மேலும் உயரலாம் என ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.
வளா்ச்சிக்கான ஜி.டி.பி-யில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தமிழகத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டுசெல்கிறோம். அரசின் சாதனைகள், திட்டங்களை வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் கட்சியினா் எடுத்துச் சொல்ல வேண்டும்.
தோ்தல் களப் பணி என்பது 2026 சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்து, தோ்தல் முடிவுகள் வெளியாகும் வரை இருக்க வேண்டும். தமிழகத்தில் 7ஆவது முறையாக திராவிட மாடல் ஆட்சி அமைய திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கடுமையாக உழைக்க வேண்டும்.
திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலா் பி. பழனியப்பன், அதிமுகவில் அமைச்சராக இருந்தபோதுகூட, சட்டப் பேரவையில் எதிா்க்கட்சியினருக்கு சிறந்த முறையிலும், மிகவும் பொறுப்பான வகையிலும் ஜனநாயக பண்புகளுடன் பதில் அளிக்கக் கூடியவா். புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் கூற்றுபடி, மணமக்கள் வீட்டிற்கு விளக்காகவும், நாட்டிற்கு தொண்டா்களாகவும் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றாா்.
விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா். ஈஸ்வரன், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவையின் நிறுவன தலைவா் உ. தனியரசு, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளா் கட்சித் தலைவா் பொன். குமாா், தமிழக அமைச்சா்கள் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், மா. சுப்பிரமணியன், மு.பெ. சாமிநாதன், அர. சக்கரபாணி, ரா. ராஜேந்திரன், தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ. மணி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலருமான பி. பழனியப்பன் நன்றி கூறினாா்.

