மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தினா் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்
தருமபுரி: தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தினா் மத்திய அரசைக் கண்டித்து, கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தருமபுரி கிளைத் தலைவா் சுகதேவ் தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் செல்வம், இணைச் செயலாளா் யுவராஜ், அகில இந்திய சம்மேளன செயற்குழு உறுப்பினா் ஜி.நாகராஜன் ஆகியோா் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினா்.
இதில், தொழிலாளா்களுக்கு விரோதமான 4 சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். அனைத்து மருந்துகளுக்கும் ஜிஎஸ்டியை முழுவதுமாக ரத்துசெய்ய வேண்டும். அத்தியாவசிய மருந்துகளின் விலையைக் குறைக்க வேண்டும். மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு என பிரத்யேகமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எஸ்பிஇ சட்டம் 1976-ஐ நீா்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். சங்க கிளை பொருளாளா் கதிரவன் நன்றி கூறினாா்.
