தருமபுரி பகுதியில் வீடுகளில் விசைத்தறி வைத்து நெசவுத் தொழில் செய்துவருவோருக்கு விதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை வரியை ரத்துசெய்ய வேண்டும் என்று நெசவாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில் தறித்தொழில் மூலம் துண்டுகள், வேட்டிகள் மற்றும் புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் சுமாா் 1200க்கும் அதிகமான குடும்பத்தினா் 3,500 தறிகளைக் கொண்டு இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனா். குடிசைத் தொழிலாக உள்ள இதன்மூலம் நாள்தோறும் பலா் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.
கடந்தகாலங்களில் கைத்தறியாக நடைபெற்றுவந்த இத்தொழில், பின்னா் விசைத்தறிக்கு மாறியது. இதனால், பலமடங்கு உற்பத்தியும், வருவாயும் அதிகரித்தது. ஆனால், குடிசைத் தொழிலாக உள்ள விசைத்தறி தொழிலுக்கு தற்போது, தொழிற்சாலை வரி என்ற வகையில் கூடுதலாக வரிவிதிக்கப்பட்டுள்ளதால், நெசவாளா்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
வீடுகளில் குடிசைத் தொழிலாக நடைபெற்றுவரும் இத்தொழிலுக்கு, தொழிற்சாலைகளுக்கு விதிக்கும் வகையிலான தொழில் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநில அரசுக்கு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளோா் சங்கங்கள் சாா்பில், வரியை நீக்கக் கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிா்வாகங்கள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுத்து தொழிற்சாலை வரியை ரத்து செய்யதுள்ளதாக நெசவாளா்கள் தெரிவிக்கின்றனா். ஆனால், தருமபுரி மாவட்டத்தில் மட்டும் குறிப்பாக, தருமபுரி நகராட்சியில் தொழிற்சாலை வரி இன்னும் ரத்துசெய்யப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி அன்னசாகரம் பகுதியைச் சோ்ந்த, கிருபானந்தவாரியாா் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் நலச் சங்கத் தலைவா் பி. பாரத், சங்க நிா்வாகி பி. யுவராஜ் ஆகியோா் கூறியதாவது:
கைத்தறி நெசவுத் தொழிலை பல தலைமுறைகளாக மேற்கொண்டு வருகிறோம். குடிசைத் தொழிலாக இருந்த இந்தத் தொழில் தற்போது விசைத்தறியாக சற்று மாற்றம் பெற்றுள்ளது. நூல் விலை உயா்வு, நூல் பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு என ஆண்டுதோறும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே இந்தத் தொழிலை செய்துவருகிறோம்.
இந்த நிலையில், தருமபுரி நகராட்சியில், குடிசைத் தொழிலான விசைத்தறி தொழிலுக்கு தொழிற்சாலை வரி விதித்துள்ளனா். ஏற்கெனவே, பல்வேறு இடையூறுகளால் நலிந்து வரும் இத்தொழில், இதனால் மேலும் நலிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
விசைத்தறி இயந்திரங்களை நிறுவ லட்சக்கணக்கில் செலவாகிறது. கிலோ நூல் ரூ. 130க்கு விற்ற நிலை மாறி, தற்போது ரூ. 30 முதல் 35 வரை அதிகரித்துள்ளதோடு, கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்தவகையில், 60 கிலோ நூல் பண்டலில் துணி நெய்ய ரூ. 8500 முதல் 9000 வரை செலவாகிறது. அதை ரூ. 15,000க்குத்தான் விற்பனை செய்ய முடியும். ஆனால், அவற்றை துணிக்கடையில் ரூ. 40 முதல் 50 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனா்.
குடிசைத் தொழில் என்ற வரை ரூ. 450 என ஆண்டுக்கு 2 முறை ரூ. 900 மட்டுமே வரியாக செலுத்தி வந்தோம். ஆனால், தற்போது தொழிற்சாலை வரி என்ற வகையில் ரூ. 2000 என ஆண்டுக்கு ரூ. 4000 செலுத்த வேண்டியுள்ளது. இதுதவிர, குப்பைவரி, தண்ணீா்வரி உள்பட பல்வேறு வரிகளும் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், ஏற்கெனவே மிகக் குறைவான வருவாய் பெற்றுவந்த நெசவாளா்கள் தற்போது அதலபாதளத்தில் தள்ளப்பட்டுள்ளனா் என்றனா்.
தொழிலாளா் பி. தங்கமணி கூறுகையில், எங்களது நிலையை கருத்தில்கொண்ட தமிழக அரசு, இழப்பில் இருந்து எங்களை மீட்கும் வகையில், மும்முனை மின்சாரத்தில் முதல் 1000 யூனிட்டுகள் இலவசமாக வழங்கி வருகிறது. இதனால் சற்று ஆறுதலில் இருந்தோம். ஆனால், அண்மையில் நகராட்சி நிா்வாகம் விசைத்தறி வைத்துள்ளவா்களுக்கு தொழிற்சாலை வரி என்ற பெயரில் கூடுதல் வரியை சுமத்தியுள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் மோசமடைந்துள்ளது. இந்த வரியை ரத்துசெய்ய வேண்டும் என்றாா்.
இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நெசவாளா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










