ஒசூர், டிச. 9: ராஜாஜி பிறந்த ஊரில் மணிமண்டபம் கட்ட, கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் விரைவில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
ராஜாஜி பிறந்த ஊரான ஒசூர் அடுத்த தொரப்பள்ளி ஊராட்சி, மோரனப்பள்ளியில் ராஜாஜிக்கு மணிமண்டபம் கட்ட, 2004-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார்.
அதன் பிறகு வந்த திமுக அரசு, மணிமண்டபம் கட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாளில் ராஜாஜி சிலைக்கு மாலை அணிவித்த அப்போதைய செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி உள்ளிட்ட மக்கள் பிரதி நிதிகள், அடுத்த ஆண்டுக்குள் மணிமண்டபம் கட்டப்படும் என்று மேடையில் பேசிவிட்டுச் சென்றனர். ஆனால், திமுக ஆட்சி செய்த கடந்த 5 ஆண்டுகளில், ராஜாஜிக்கு மணிமண்டபம் கட்டவில்லை.
ராஜாஜி பிறந்த நாளில் மட்டும் அவரது சிலைக்கு மாலை அணிவித்துச் செல்லும் மக்கள் பிரதிநிதிகள், அவருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்று தொரப்பள்ளி மக்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ராஜாஜியின் 133-வது பிறந்த நாள் விழா சனிக்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது.
வழக்கம்போல, செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் ராஜாஜி பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இப்போது அதிமுக ஆட்சி நடைபெறுவதால், ராஜாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்த அறிவிப்பை விழாவில் பங்கேற்கும் அமைச்சர் கே.பி. முனுசாமி வெளியிடுவார் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், மோரனப்பள்ளி கிராமத்துக்குச் செல்லும் வழியில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும். தொரப்பள்ளியில் இருந்து ஒசூருக்கு கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்.
தொரப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக வலியுறுத்தி வருகின்றனர். அரசு நடவடிக்கை எடுக்குமா..?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.