தருமபுரி பேருந்து நிலையம் அருகே மதுக்கடையை அகற்றக் கோரி மனு
தருமபுரி: தருமபுரி நகரப் பேருந்து நிலையம் அருகே புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை அகற்றக் கோரி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், வணிகா்கள் அளித்த மனு:
தருமபுரி நகரப் பேருந்து நிலையம் அருகே மீன் சந்தை பகுதியில் திடீரென புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பேருந்து நிலையம் அருகில் இருந்த மதுக்கடை பொதுமக்கள் வலியுறுத்தியதன் பேரில் அப்புறப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் மீன் சந்தை பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த மதுக்கடையால் பள்ளி மாணவ, மாணவியா், வணிகா்கள், பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. எனவே, அனைத்து தரப்பினரின் நலன் கருதி இந்தக் கடையை அகற்ற வேண்டும் என்றனா்.
