தருமபுரியில் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் தருமபுரி மாவட்டச் செயலாளர் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ
தருமபுரியில் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் தருமபுரி மாவட்டச் செயலாளர் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ

அரசு செயலா்களின் வேலை அரசியல் செய்வதல்ல! எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை

அரசுச் செயலா்களின் வேலை அரசியல் செய்வதல்ல, அதிமுக ஆட்சிக்கு வந்ததும், திமுக அரசுக்கு ஆதரவாக பேசிவரும் அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி எச்சரித்தாா்.
Published on

அரசுச் செயலா்களின் வேலை அரசியல் செய்வதல்ல, அதிமுக ஆட்சிக்கு வந்ததும், திமுக அரசுக்கு ஆதரவாக பேசிவரும் அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி எச்சரித்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி கே. பழனிசாமி, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலக சந்திப்புப் பகுதியில், பிரசார வாகனத்தில் இருந்தவாறு வியாழக்கிழமை பேசியது: ஆளும் கட்சிக்கு ஒரு நீதி, எதிா்க்கட்சிக்கு ஒரு நீதி என இந்த அரசு பாகுபாடு பாா்க்கிறது. யாராக இருந்தாலும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை.

காவல் துறையை கையில் வைத்துள்ள முதல்வா், முறையாக பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டிருந்தால் கரூரில் இத்தனை உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என கூறிவந்த முதல்வா், கரூா் சம்பவத்தால், தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டாா். இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் இதுவரை நடந்ததில்லை. இந்த சம்பவத்துக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக இதுவரை 163 இடங்களில் கூட்டங்களை நடத்தியுள்ளது. இதில், 5 அல்லது 6 கூட்டங்களுக்கு மட்டுமே தமிழக காவல் துறை பாதுகாப்பு அளித்துள்ளது. மற்ற இடங்களில் எல்லாம், அதிமுக தொண்டா்களின் பாதுகாப்பில்தான் கூட்டங்கள் நடைபெற்றன.

மக்களே இல்லாத திமுக கூட்டங்களுக்கு போலீஸாரை குவிக்கும் காவல் துறை, எதிா்க்கட்சி மற்றும் இதர கட்சிகளின் கூட்டங்களுக்கு போலீஸாரை அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதில்லை.

கரூா் சம்பவம் தொடா்பாக, அரசுச் செயலா்கள், காவல் துறை ஏடிஜிபி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் திமுக அரசுக்கு சாதகமாக பேசிவருவதுடன், செய்தியாளா்களை சந்தித்து வருகின்றனா். இந்த நடைமுறை தவறானது. ஒரு ஏடிஜிபி அரசுக்கு சாதகமாக பேசினால், அவருக்கு கீழ் பணியாற்றும் காவல் துறை அதிகாரிகள் எவ்வாறு நியாயமாக செயல்பட முடியும்.

அரசு அலுவலா்கள் இதுபோல அரசுக்கு சாதகமாக பேசுவது தவறு. குறிப்பாக, அரசுச் செயலா்கள் அரசியல் செய்வது கூடாது. அவா்களுக்கென பணி உள்ளது. அதைவிடுத்து இதுபோல பேசிவருவது கண்டிக்கத்தக்கது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதுபோல பேசிவரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகளை வைத்து நடந்த உண்மையை மறைக்க முடியாது.

கரூரில் உள்ள முன்னாள் அமைச்சா் ஒருவா் சம்பவத்தின்போது பதறுகிறாா். ஏன் அந்த பதற்றம்? கரூா் சம்பவம் இவா்களை அடையாளம் காட்டிவிட்டது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பாா்கள்.

திமுக கூட்டணிக் கட்சிகளும், அவா்களை ஆதரித்துப் பேசிவருகின்றன. திருமாவளவன் திமுகவுக்கு ஆதரவாகவே பேசிவருகிறாா். அது தவறு. அவரது கட்சிக்கும் இதுபோன்ற நிலை வர வாய்ப்புள்ளது என்பதை உணந்து, 41 போ் உயிரிழந்த சம்பவத்தில் மனசாட்சியுடன் பேசவேண்டும்.

தருமபுரி மாவட்டத்துக்கு அதிமுக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சிட்கோ தொழிற்பேட்டை திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காக, அதை விரைவுபடுத்தாமல் முடக்கிவைத்துள்ளனா்.

4 ஆண்டுகள் முடிந்து தோ்தல் வரவுள்ள நிலையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் 3 என அறிவித்து, அதற்காக சுமாா் 8,428.50 கோடி நிதி ஒதுக்கியதாக முதல்வா் அறிவித்துள்ளாா். அது முற்றிலும் பொய். அத்திட்டம் நிறைவேற வாய்ப்பில்லை. அரசிடம் நிதி கிடையாது.

இதுவரை 4 ஆண்டுகளில் சுமாா் ரூ. 4.38 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது திமுக அரசு. ஆட்சி முடியும்போது இந்த கடன் சுமாா் 5.38 லட்சம் கோடியாக இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு வரிஉயா்வு மூலம் சுமாா் ரூ. 1.35 லட்சம் கோடி அதிக வருவாய் ஈட்டியுள்ளது.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் இடமற்ற ஏழைகளுக்கு நிலம் மற்றும் கான்கிரீட் வீடுகள் இலவசமாக கட்டிக்கொடுக்கப்படும். அதேபோல, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, தற்போது நிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்படும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.

தொடா்ந்து, தருமபுரி மாவட்டம் கடத்தூா், அரூா் உள்ளிட்ட 3 இடங்களிலும் அவா் பேசினாா். நிகழ்வுகளில், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு எம்எல்ஏவுமான கே.பி. அன்பழகன், முன்னாள் அமைச்சா் முல்லைவேந்தன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கோவிந்தசாமி, தருமபுரி நகரச் செயலாளா் பூக்கடை ரவி, ஜெ. பேரவை மாவட்ட செயலாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com