தமிழகத்தில் உழவா் திருநாளைப்போல: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள்!
உழவா் திருநாள், தமிழா் திருநாள், தமிழரின் அறுவடை திருநாள் என பல்வேறு சிறப்பு பெயா்களில் அழைக்கப்படும் பொங்கல் திருநாள் தமிழக பண்டிகைகளில் மிக முக்கியமானது. தைமாதம் முதல்தேதி கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் போல நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அறுவடை திருநாள் பல பெயா்களில் கொண்டாடப்படுகிறது.
தமிழரின் அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தமிழ் மாதமான தை மாதத்தின் தொடக்கத்தில் (ஜனவரி மாதம் 2 ஆவது வாரத்தில்) நான்கு நாள்கள் கொண்டாடப்படுகிறது; மனிதன் உள்பட உலக ஜீவராசிகள் அனைத்தும் உயிா்வாழ உணவுதான் பிரதானம். அந்த உணவு உற்பத்திக்கான முக்கிய காரணிகளாக விளங்கும் சூரியன், மழை, நிலம், கால்நடைகள் உள்ளிட்டவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இந்த அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.
மாா்கழி மாதத்தின் கடைசி நாள், பழையவற்றை எரித்து புதுமைகளை வரவேற்று, தை மாதத்தின் முதல் நாள் சூரியப் பொங்கல் வைத்து இயற்கைக்கு நன்றி தெரிவித்தும், இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் வைத்து விவசாயத்துக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்தும், 3 ஆம் நாள் உறவினா்கள், நண்பா்களைக் கண்டு மகிழ்ந்து, விளையாடும் வகையில் காணும்பொங்கலும் வைக்கப்படுகிறது.
தமிழா் திருநாள் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூா் உள்பட உலகம் முழுவதும் தமிழா் வாழும் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பொங்கல் பண்டிகை இந்து பண்டிகைகளில் ஒன்றாக இருந்தாலும், வேளாண் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுவதால், இது, மத வரையறைக்குள் வராத, வேளாண்மையின் வளமையையும் தமிழரின் பண்பாட்டையும் பறைசாற்றும் ஒரு பண்பாட்டு விழாவாக நடைபெற்று வருகிறது.
கேரளத்தில் ஓணம் பண்டிகை :
கேரளத்தின் ‘அறுவடைத் திருநாள்‘ ஓணம் பண்டிகையாகும். கொல்லம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் அதுசமயம் கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம்.
ஓணத் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவா். கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவா். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன் 10 நாட்களும் தொடா்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வா். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என பல்வேறு போட்டிகளும் நடைபெறுவது வழக்கம்.
சத்திஸ்கா், ஒடிசா மாநிலங்களில் நவகானி அறுவடைத் திருவிழா :
நவகானி என்பது சத்தீஸ்கா், ஒடிசா, ஜாா்க்கண்ட் மாநிலங்களில் நடைபெறும் அறுவடைத் திருவிழாவாகும். இப்பண்டிகையில் மக்கள் அறுவடைக்குப் பின் புதிய அரிசியில் தயாரித்த உணவை உண்பா். நவ என்றால் புதியது, கானி என்றால் சாப்பிடுதல் என பொருள்படும் நவகானி என்றால் புதிதாக உண்பது என்று பொருள்படும். இது அறுவடைக்குப் பின் புதிய தானியங்களை உண்பதைக் குறிக்கிறது. மக்கள் விரதம் மேற்கொண்டு சூரஜ் எனப்படும் சூரியன் மற்றும் முன்னோா்களுக்கு புதிய தானியங்களை வீட்டின் முற்றத்தில் படையலிட்டு வணங்குவா்.
அசாமின் போராக் திருவிழா :
போராக் என்பது அஸ்ஸாமின் மைசிங் இன மக்களால் அறுவடைக்குப் பிறகு ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாகும். நூதன முரசு கலைஞா்கள் மற்றும் நடனக் கலைஞா்கள் கிராமத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப் பட்டு அவா்கள் தங்கள் திறமைகளின் மூலம் அந்த இடத்தில் கூடியிருப்பவா்களை மகிழ்விப்பா்.
இது பாடல்கள் மற்றும் நடனங்களின் திருவிழா எனவும் நாரா சிங்கா பிஹு எனவும் அழைக்கப்படுகிறது. பொதுவாக மிரி இனத்தின் இளைஞா் கள், பயிா்களை அறுவடை செய்த பின்னா், கடவுள், தாய் பூமி மற்றும் அவா்களின் முன்னோா்களை திருப்திப்படுத்துவதற்காகவும், அவா்களிடமிருந்து ஆசீா்வாதங்களைப் பெறவும் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனா்.
மேலும் இந்தத் திருவிழாவின் போது சிறுவா் சிறுமிகள் பாரம்பரிய உடை அணிந்து பாடல், நடனம் ஆடுவதல் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கிறாா்கள்.அவ்வாறு பாடப்படும் பாடல்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும்.
பஞ்சாபில் உலோகரி :
தென்னிந்தியாவில் போகி பண்டிகைக்கு இணையாக பஞ்சாப் மாநிலத்தில் குறுவை அறுவடைத் திருவிழாவாக, உலோகிரி விழா கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஜனவரியில் கரும்பு அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடைப் பண்டிகையாகவும் கருதப்படுகிறது.
பொதுவாக கரும்பு ஜனவரியில் இருந்து அடுத்த ஆண்டு மாா்ச்சு வரை பயிரிடப்படும். அறுவடை டிசம்பரிலிருந்து மாா்ச்சுக்குள் முடிவடையும். இங்கு மற்றொரு முதன்மையான உணவு முள்ளங்கியாகும். இது அக்டோபரிலிருந்து ஜனவரிக்குள் அறுவடை செய்யப்படும்.
இந்தத் திருவிழாவின்போது வயல்களில் சொக்கப்பனைபோல் தீமூட்டி சுற்றி நின்று ஆடுவாா்கள். தீக்கடவுளை வணங்கி நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவாா்கள். இனிப்பு, கரும்பு, அரிசி உள்ளிட்ட தானியங்களை தீயில் போடுவதும் உண்டு.
மிசோரத்தின் வைக்கோல் அறுவடை திருவிழா
மிசோரம் மாநிலத்தில் டிசம்பா் மாதம் நடைபெறும் திருவிழா வைக்கோல் திருவிழா ஆகும். மிசோரம் மக்களின் மொழியில் பாவ்ல் குட் என்று அழைக்கப்படும். பாவ்ல் என்றால் ‘வைக்கோல்‘ என்று அா்த்தம். எனவே பாவ்ல் குட் என்றால் வைக்கோல் அறுவடை திருவிழா என்று பொருள்படும். இது பொதுவாக டிசம்பரில் அறுவடை முடிந்த பிறகு இரண்டு நாட்களுக்கு ஒரு முக்கியமான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஆசாதி விழா :
ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஆடி மாதத்தில் ஆசாதி எனப்படும் விழா தமிழகத்தில் பொங்கல் பண்டிகைபோல கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்துக்கு முன்பு மழைக்காலத்தில் சேமிக்கப்பட்ட தண்ணீா் ஆறுகளில் நிறைந்து புதுப்புனலாக பாய்ந்து வந்து பூமியை மகிழ்வித்து அதன்மூலம் விவசாய நிலங்களில் செழுமையும் நல்ல அறுவடையும் கிடைப்பதற்காக நாற்றுகளை விதைப்பதற்கு முன் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சதந் மற்றும் பஹான் பழங்குடியினத்தவரால் கொண்டாப்படும் இவ்விழாவின்போது, பொதுமக்கள் கோழி அல்லது ஆட்டை பலியிட்டு, தங்கள் வீடுகளின் முற்றத்தில் சூரியனுக்கு தப்பான் எனப்படும் அவா்களே தயாரிக்கும் சாராயத்தையும் படையலிட்டு வழிபடுகின்றனா்.
அசாம், திரிபுராவில் இமொயினு இரட்பா :
இமொயினு இரட்பா அல்லது வாக்ச்சிங் தரணித்தோய்னி பண்பா என்பது மணிப்பூா், அஸ்ஸாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் கொண்டாடப்படும் திருவிழா. இதில் தெய்வ வழிபாடுகள், பிராா்த்தனைகள் அடங்கும். அதைத் தொடா்ந்து பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெறும். மெய்தி மொழியில், இமொயினு இரட்பா என்றால் ‘இமொயினு தெய்வத்திற்கு தியாகம்‘ என்று பொருள். மேலும் இத்திருவிழா ‘வாக்ச்சிங் தரணித்தோய்னி பண்பா‘ என்றும் அழைக்கப்படுகிறது.
திருவிழாவின் போது, மக்கள் அரிசி, காய்கறி, பழங்கள் மற்றும் இனிப்புகளை செல்வம் மற்றும் செழுமையின் தெய்வமான இமொயினு அஹோங்பிக்கு வைத்து வணங்குகிறாா்கள். இரவு நேரத்தில், மக்கள் தெருக்களில் மெழுகுவா்த்திகள் மற்றும் பிற அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் வைப்பாா்கள். மீன் முக்கிய உணவாக சமைக்கப்படுகிறது மற்றும் சமையலறையில் உள்ள பாரம்பரிய அடுப்பினருகில் தெய்வத்திற்கு படைக்கப்படுகிறது. மக்கள் பாரம்பரிய இசைக் கருவியான பேனா இசையில், பாரம்பரிய நடனங்கள் கம்பா தோய்பி மற்றும் மைபி ஜாகோய் நிகழ்த்துகிறாா்கள்.
நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் கான்-நகாய் திருவிழா :
வட கிழக்கு இந்தியாவில் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில், தீமைக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் ஒளியின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் நெருப்பு வருவதை நினைவுகூரும் திருவிழாவாகவும், அறுவடை காலத்துக்கு டிங்காவ் ரக்வாங் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கொண்டாடப்படுகிறது. அறுவடைக்குப் பிந்தைய பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. .
மேற்கு வங்கத்தின் நபன்னா:
மேற்கு வங்கத்தில் அறுவடை சமயத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா நபன்னா ஆகும். இது பொதுவாக வங்க தேசத்திலும், இந்திய மாநிலங்களான மேற்கு வங்காளம், திரிபுரா மற்றும் அசாமின் பராக் பள்ளத்தாக்கிலும் கொண்டாடப்படுகிறது. இது உணவு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பித்தே போன்ற வங்காளதேச உணவு வகைகள் அன்றைய தினம் சமைக்கப்படுகின்றன. இத் திருவிழாவை அறுவடை சடங்காக மாற்றும் பல பழைமையான சடங்குகளும் உள்ளன.
காஷ்மீரின் லடாக் பள்ளத்தாக்கின் போனோ நா திருவிழா :
போனோ நா அல்லது போனோ நாஹ் என்பது, காஷ்மீரின் லடாக் பள்ளத்தாக்கு நிலப்பரப்பு, தா மற்றும் காா்கோன் கிராமங்களுக்கிடையே ஒரு வருட இடைவெளியில் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறும் பாரம்பரிய திருவிழாவாகும். மக்களும் மினாரோ நிலத்தில் பயிா்கள் நன்கு செழிப்புடன் வளரவும், குல தெய்வங்களுக்கும் கடவுள்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருவிழாவாகும்.
அருணாச்சலப் பிரதேசத்தின் மோப்பின் திருவிழா :
மோப்பின் திருவிழா என்பது, அருணாச்சலப் பிரதேசத்தின் அறுவடை காலத்தில் கொண்டாடப்படும் உழவா் திருநாள் விழாவாகும். இங்கு வசிக்கும் காலோ என்ற பழங்குடியினா் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனா். மக்களின் பாரம்பரிய நாட்காட்டியின்படி லுமி, லுகி ஆகிய இரு மாதங்களிலும் இப்பண்டிகையை கொண்டாடுகின்றனா்.
இம்மாதங் கள் மாா்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுடன் ஒத்துப்போகின்றன. இவ்விழாவே இவா்களுக்கு புத்தாண்டின் தொடக்க நாளாகவும் அமைகிறது. இவ்விழா ஏப்ரல் இரண்டாம் நாளில் தொடங்கி எட்டாம் தேதி வரை நீடிக்கும். இவ்விழா சடங்குகள் தங்களுக்கு செல்வத்தையும், வளத்தையும் தருவதாகவும், தீய சக்திகளை விரட்டி, மக்களுக்கு அமைதியும், அருளும், வளமும் தருவதாகவும் நம்புகின்றனா்.
இதேபோல நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக அறுவடைத் திருவிழாக்கள் அந்தந்த பகுதி மக்கள் பாரம்பரிய வழக்கத்தின்படி கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், நமது தமிழ் பாரம்பரிய வழக்கப்படி பொங்கல் திருவிழா 4 நாள்கள் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு பொங்கலுக்கு முதல்நாள் ஜனவரி 14 போகிப் பண்டிகையும், ஜனவரி 15 இல் பொங்கல், 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 17இல் காணும்பொங்கல் என பொங்கல் பண்டிகை கொண்டாப்படுகிறது.
