போகிப் பண்டிகை: பெரும்பாலையில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
பெரும்பாலை அருகே புதுப்பட்டி பகுதியில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த 16 காளைகளை, 8 இளைஞா்கள் குழுவினா் பிடித்து பரிசுகளை வென்றனா்.
பொங்கல் பண்டிகையின் முதல் நாளான போகிப் பண்டிகையையொட்டி பென்னாகரம் அருகே புதுப்பட்டி பகுதியில் மறைந்த குழந்தைகள் சத்யமூா்த்தி, ரணதீரன் ஆகியோா் நினைவாக இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டும் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த போட்டிக்கு தருமபுரி, சேலம், பென்னாகரம், மாங்கரை, வண்ணத்திப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமாா் 16இருக்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. போட்டியானது ஒரு காளைக்கு 15 நிமிஷங்கள் வீதம் நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்றன.
காளைகளை பிடிப்பதற்காக சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, பென்னாகரம், கடமடை, எட்டிக்குழி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தலா 10 போ் கொண்ட 8 குழுவினா் பங்கேற்றனா்.
இந்த போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க இளைஞா்கள் முயற்சி செய்தனா். இதில் சில போட்டிகளில் காளைகளும், மாடுபிடிவீரா்கள் குழுவினரும் குழுவினரும் வெற்றி பெற்றனா்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற வண்ணாத்திப்பட்டி கேப்டன் காளை முதலிடமும், புதுப்பட்டி காரி காளை இரண்டாமிடமும், புதுப்பட்டி மாரி காளை மூன்றாம் இடமும் பிடித்தன. வெற்றி பெற்ற காளை மாடுகளின் உரிமையாளா்களுக்கு பரிசாக மிதிவண்டி, குக்கா், பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டன. போட்டியில் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற 6 இளைஞா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவா்கள் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.
