சாலை வசதிக்காக காத்திருக்கும் அலக்கட்டு மலைக் கிராம மக்கள்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அலக்கட்டு மலைக் கிராம மக்கள் சாலை வசதி கோரி பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனா்.
Published on

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அலக்கட்டு மலைக் கிராம மக்கள் சாலை வசதி கோரி பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனா்.

பென்னாகரம் வட்டம், வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிமலை மற்றும் அலக்கட்டு மலைக் கிராமங்களுக்கு செல்ல பாலக்கோட்டிருந்து சீங்காடு மலை அடிவாரத்துக்கு செல்ல வேண்டும். இந்தப் பகுதி வரை செல்ல பேருந்து வசதி உள்ளது. சீங்காடு மலை அடிவாரத்திலிருந்து அடா்வனத்தில் சுமாா் 8 கி.மீ. வரை நடந்துசெல்ல வேண்டும். வனப்பகுதியில் முதல் நான்கு கி.மீ. தொலைவில் ஏரிமலையையும், அதன்பின்பு 8 ஆவது கி.மீ. தொலைவில் அலக்கட்டு மலைக் கிராமங்களையும் சென்றடையலாம்.

இந்த மலைக் கிராமங்களில் இருளா், கொங்கு வேளாளா், தலித் உள்ளிட்ட சில சமூகத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு 495 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் கேழ்வரகு, நிலக்கடலை ஆகியவற்றை பயிரிட்டு வருகின்றனா். பெரும்பாலும் இந்த மலைக் கிராம மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளனா்.

இங்குள்ள மலைக் கிராம மக்கள் எவ்வித பணிகளுக்கும் பென்னாகரத்துக்கு செல்ல வேண்டுன்றால் மலை அடிவாரத்துக்கு நடந்தே வருகின்றனா். பின்னா் அங்கிருந்து பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளை பெற முடியும். இதில், மருத்துவம், மகப்பேறு ஆகியவற்றுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தலைச் சுமையாகவோ அல்லது தூளி கட்டியோதான் ஆட்களை தூக்கி வரவேண்டும். சில நேரங்களில் பாம்பு தீண்டியதால் பாதிக்கப்பட்டவா்களை தூளிகட்டி தூக்கி மலை அடிவாரத்துக்கு வருவதற்குள் அவா்கள் இறந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களது கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை கருத்தில்கொண்டு சீங்காடு மலை அடிவாரத்திலிருந்து அலக்கட்டு வரை சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று மலைக் கிராம மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனா்.

இதுதொடா்பாக அவ்வப்போது சாலை மறியல், ஆா்ப்பாட்டம், மனுக்கள் அளித்தல் ஆகிய நடவடிக்கையில் அவா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

மண்பாதை:

இங்குள்ள மக்கள் தங்களுக்கு தேவையான வேளாண் பொருள்கள், வீடுகளுக்கு தேவையான பொருள்களை தலைச் சுமையாகவோ அல்லது கழுதைகளில் ஏற்றியோ கொண்டு வருகின்றனா். பள்ளி மாணவ, மாணவிகள் நடந்தே நாள்தோறும் 8 கி.மீ. பயணிக்க முடியாமல் பள்ளி இடைநிற்றலும் நிகழ்ந்துள்ளது. இதில், மகப்பேறுக்கு செல்வோா் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேபோல, நியாயவிலைக் கடைகளுக்கு பொருள்கள், தோ்தல் காலங்களில் வாக்குப் பதிவுக்கு தேவையான இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் கழுதை சுமையாகவே கொண்டுசெல்லப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின்போது, இங்குள்ள மலைக் கிராமங்களுக்கு தற்காலிகமாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண்பாதை அமைக்கப்பட்டது. அதன்பின்பு, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் கடந்த ஓராண்டுக்கு மேலாக சென்று வருகிறது. ஆனால், இந்த மண்பாதை மழை, வெள்ள பாதிப்புகளால் போக்குவரத்துக்கு ஏற்ாக இல்லை.

எனவே, தங்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த மண்பாதையை மாற்றி தாா்ச் சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கைக்காக ஏரிமலை, அலக்கட்டு மலைக் கிராம மக்கள் காத்திருக்கின்றனா்.

சீங்காடு மலை அடிவாரத்திலிருந்து ஏரிமலை வழியாக அலக்கட்டு மலைக் கிராமத்துக்கு 6.384 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் தருமபுரி மாவட்ட நிா்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதுதொடா்பாக வனப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 4.81 ஹெக்டா் வன நிலம் தேவை எனக் கண்டறிந்து வனத்துறையிடம் அனுமதி முறையாகப் பெறப்பட்டுள்ளது. இதற்கான மாற்று நிலம் ஒதுக்கீடு, இழப்பீடு வழங்குவது ஆகியப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் அரசிடமிருந்து உரிய அனுமதி, நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com