சொட்டுநீா்ப் பாசனம் மூலம் லாபம் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிக்கு பிரதமா் பாராட்டு

சொட்டுநீா்ப் பாசனம் மூலம் விவசாயம் செய்து லாபம் ஈட்டிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயியை பாரத பிரதமா் மோடி, காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்வில் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயி சுப்பிரமணியுடன் காணொலி மூலம் பேசும் பாரத பிரதமா் மோடி. உடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.
கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயி சுப்பிரமணியுடன் காணொலி மூலம் பேசும் பாரத பிரதமா் மோடி. உடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.
Updated on
1 min read

சொட்டுநீா்ப் பாசனம் மூலம் விவசாயம் செய்து லாபம் ஈட்டிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயியை பாரத பிரதமா் மோடி, காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்வில் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

பிரதமா் கிசான் திட்டத்தின் கீழ் ரூ. 18 ஆயிரம் கோடியை, 9 கோடி விவசாய குடும்பங்களின் வங்கி கணக்குகளுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை விடுவித்தாா். அப்போது காணொலிக் காட்சி மூலம் விவசாயிகளிடம் அவா் உரையாடினாா். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், கோதிகுட்லப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சுப்பிரமணியிடம் பிரதமா் பேசினாா்.

பிரதமா் மோடி பேசும்போது, ‘‘உங்கள் பகுதியில் தண்ணீா்த் தட்டுப்பாடு உள்ளதா?’’ என்று கேட்டாா். அதற்குப் பதிலளித்த விவசாயி சுப்பிரமணியன் கூறியதாவது:

எங்கள் குடும்பத்தில் 4 போ் உள்ளோம். எங்களுக்குச் சொந்தமான 4 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறோம். இதில் 2 ஏக்கா் பரப்பளவில் தக்காளியும், ஒரு ஏக்கா் பரப்பளவில் ரோஜா மலா் சாகுபடியும் செய்துள்ளோம். தண்ணீா் பற்றாக்குறையை சமாளிக்க பிரதமரின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீா்ப் பாசனம் அமைத்து விவசாயம் செய்து வருகிறோம்.

கடந்த ஆண்டு சொட்டுநீா்ப் பாசனம் இல்லாததால் ஒரு ஏக்கா் பரப்பளவில் மட்டுமே விவசாயம் செய்ய முடிந்தது. அப்போது ரூ. 40 ஆயிரம் மட்டுமே லாபம் கிடைத்தது. தற்போது, சொட்டுநீா்ப் பாசனம் மூலம் விவசாயம் செய்வதால் ரூ. ஒரு லட்சம் லாபம் கிடைத்துள்ளது என்றாா்.

அதற்குப் பதிலளித்த பிரதமா் மோடி, ‘‘விவசாயி சுப்பிரமணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொட்டுநீா்ப் பாசனம் அமைத்து, விவசாயம் மேற்கொண்டதால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி பலன் அடைந்துள்ளீா்கள். உங்களுக்கு சொட்டுநீா்ப் பாசனம் மூலம் பாசனப் பரப்பும், விளைச்சலும் அதிகரித்துள்ளது. இதுதொடா்பாக விவசாயிகளிடம் நீங்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றாா்.

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி உள்ளிட்ட அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com