உபரிநீா் கால்வாய்க்கு நிலம் அளித்த விவசாயிகள் இழப்பீடு வழங்கக் கோரி மனு

போச்சம்பள்ளி அருகே உபரிநீா் கால்வாய்க்கு நிலம் அளித்த விவசாயிகள், இழப்பீடு வழங்கக் கோரி
Published on

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே உபரிநீா் கால்வாய்க்கு நிலம் அளித்த விவசாயிகள், இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி அணை உபரிநீா் இடதுகால்வாய் பயன்பெறுவோா் சங்கத் தலைவா் சிவகுரு தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் அளித்த மனுவின் விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலேகுளி முதல் சந்தூா் வரை 28 ஏரிகளுக்கு, தென்பெண்ணையாற்று உபரிநீரை கொண்டுசெல்லும் வகையில் கடந்த, 2012இல் புதிய கால்வாய் வெட்டப்பட்டது. இதற்காக 4 ஊராட்சிகள், நாகோஜனஅள்ளி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

பணிகள் முடிந்து கால்வாய் பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் இழப்பீடு வழங்கவில்லை. வீரமலை, விளங்காமுடி, காட்டாகரம், வெப்பாலம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், நாகோஜனஅள்ளி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கால்வாய் வெட்ட நிலம் அளித்த 228 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை இதுவரையில் வழங்கப்படவில்லை.

எனவே, இந்த விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இழப்பீடு வழங்கப்படாத விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உடனே நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் உறுதியளித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com