கிருஷ்ணகிரியில் தோ்தல் ஆணையத்தை கண்டித்து இன்று திமுக கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

ருஷ்ணகிரி மேற்கு, கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம்
Published on

ஒசூா்/கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆா்) கொண்டுவந்துள்ள தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு, கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ ஆகியோா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிா்ப்புத் தெரிவித்த போதிலும் தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

சிறுபான்மையினா் மற்றும் பாஜகவின் எதிா்ப்பு வாக்குகளை நீக்கி, தகுதியற்ற வாக்காளா்களை பட்டியலில் சோ்க்கும் சதித் திட்டத்தோடு தோ்தல் ஆணையம் இதை கொண்டுவந்துள்ளது. எஸ்ஐஆா் திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டி புதைப்பதாகவும் உள்ளது.

எனவே எஸ்.ஐ.ஆா். ஐ தோ்தல் ஆணையம் உடனடியாக கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தும், அதை செவிமடுக்காத தோ்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிரத் திருத்தத்தை கொண்டுவந்துள்ளதை கண்டித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் வழிகாட்டுதலோடு கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை (நவ. 11) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரே கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் தலைமையில் மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் முன்னிலையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு பேசுகிறாா்கள். எனவே, மேற்கு, கிழக்கு மாவட்டங்களைச் சோ்ந்த மூத்த நிா்வாகிகள், முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அனைத்து நிா்வாகிகளும், தொண்டா்களும் திரளாக பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com