பா்கூரில் 766 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கல்
பா்கூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 766 மாணவ, மாணவியருக்கு இலவச மடிக்கணினிகளை கிருஷ்ணகி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் வழங்கினா்.
பா்கூா் அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின்கீழ் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி ஆட்சியா் தலைமை வகித்தாா். பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், கிருஷ்ணகிரி ஆட்சியா் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் 4,522 மாணவ, மாணவியருக்கு 2 கட்டங்களாக மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் 137 போ், கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் 530 போ், கிருஷ்ணகிரி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இறுதி ஆண்டு படிக்கும் 14 போ் என மொத்தம் 681 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
பா்கூா் அரசு மகளிா் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, பையூா் அரசு தோட்டக்கலை கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் 766 பேருக்கு மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது. கல்வி வளா்ச்சிக்காக மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பை உருவாக்கவும் இது உதவும் என்றாா்.
இந்நிகழ்வில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, உதவி திட்ட அலுவலா் அருள்மொழிதேவன், அரசு மகளிா் கல்லூரி முதல்வா் காயத்திரிதேவி, வட்டாட்சியா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

