அனுமதி காலம் முடிந்த பிறகும் காவிரியில் தண்ணீரை உறிஞ்சும் நீரேற்று பாசன சங்கங்கள்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

நீரேற்று பாசன சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி காலம் ஜனவரி மாதத்துடன் முடிந்து விட்ட நிலையில்,  இப்போதும் காவிரி
Updated on
2 min read

நீரேற்று பாசன சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி காலம் ஜனவரி மாதத்துடன் முடிந்து விட்ட நிலையில்,  இப்போதும் காவிரி ஆற்றில் பம்புசெட்டுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.   இதனைத் தடுக்க பம்புசெட்டுகளுக்கான மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். 
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியாமரியம் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி,  கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பொ.பாலமுருகன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சி.சந்தானம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  ரா.சுப்ரமணி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 
விவசாயிகள்
கோரிக்கை விவரம்...
சுந்தரம்:  கொல்லிமலை அடிவாரத்தில் வரட்டாறு வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை தூர் வாரி அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் செல்ல நடவடிக்கையெடுக்க வேண்டும்.  
துரைசாமி: மரவள்ளி கிழங்குக்கு ஆலைகள் மிகக் குறைந்த அளவிலேயே விலை நிர்ணயம் செய்கின்றன.  இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தோட்டக் கலைத் துறை மூலம் விவசாயிகளிடமிருந்து மரவள்ளிக் கிழங்குகளை கொள்முதல் செய்து விலை நிர்ணயம் செய்து,  ஆலைகளுக்கு வழங்க வேண்டும்.  பால் விலை பசும் பால் லிட்டருக்கு ரூ.50,  எருமைப்பால் லிட்டருக்கு ரூ.60 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.  சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ள வேளாண் குழுக்களுக்கு அரசு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.  
ஆட்சியர்: மாவட்டத்தில் 56 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மானியம் அரசிடமிருந்து இன்னும் வரவில்லை.
ராஜேந்திரன்: பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிலோ ரூ.12 ஆக இருந்த மரவள்ளி கிழங்கு விலை,  இப்போது கிலோ ரூ.6 ஆகக் குறைந்துள்ளது.  இதனால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.  விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலையை அறிவிக்க மாவட்ட நிர்வாகம்,  ஜவ்வரிசி ஆலை,  விவசாயிகள் அடங்கிய முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும். 
சரவணன்: பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் இழப்பீட்டுத் தொகை வந்துவிடும்.  ஆனால் 2016 ஆம் ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகை இன்னும் வரவில்லை. 
வேளாண் இணை இயக்குநர்:  நெல் பயிருக்கு ரூ.1.17 கோடி இழப்பீடு பெறப்பட்டு ரூ.1.13 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு தொகை வழங்கப்பட்டு விட்டது. பிற பயிர்களுக்கு ரூ.1.20 கோடி அளவுக்கு இழப்பீடு தேவை என பயிர்க் காப்பீட்டு நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது.  இந்த இழப்பீடுத் தொகையைப் பெற்றவுடன் பிற பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும். 
சந்திரசேகர்: சொட்டு நீர் பாசனத்துக்கான உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.  ஆனால்,  சொட்டு நீப் பாசனம் அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்கள் இப்போதும் 18 சத வரியை வசூலிக்கின்றன. 
வையாபுரி: மேட்டுர் அணையில் இருந்து வெண்டிபாளையம் தடுப்பணைக்கு சுமார் 250 கன அடி தண்ணீர் வருகிறது.  இந்த தண்ணீரை ராஜவாய்க்கால் பாசனத்தில் உள்ள வாழைப் பயிரைக் காப்பாற்ற 10 நாட்களுக்கு உயிர் தண்ணீராகத் திறந்துவிட வேண்டும்.   
ஆட்சியர்: இப்போது குடிப்பதற்கே காவிரி நீரை நம்பித் தான் இருக்கிறோம்.  குடிநீர்ப் பிரச்னையைச் சமாளிக்க முடியாத நிலையில், பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை. 
குப்புதுரை: நீரேற்று பாசன சங்கங்களுக்கு காவிரி ஆற்றில் பம்புசெட்டுகள் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் எடுத்துக் கொள்வதற்கான அனுமதி காலம் ஜனவரி மாதத்துடன் முடிவடைந்துவிட்டது.   
ஆனால் இப்போதும் சேலம்,  நாமக்கல் மாவட்டங்களில்  ஆற்றில் பம்புசெட்டுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 500  கன அடி தண்ணீர் வெண்டிபாளையம் தடுப்பணையை கடந்து செல்வதில்லை.  இந்த நீரேற்று பாசன சங்கங்களுக்கான மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க வேண்டும். 
ஆட்சியர்: நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களில் முழுமையாக ஆய்வு செய்து, ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் பம்புசெட்டுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். 
குப்புதுரை:சவுக்கு, யூகலிப்டஸ் போன்ற மரக்கன்றுகள் நடவுக்கு கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன் வழங்க வேண்டும்.  விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் எப்போது வரும் எனத் தெரியாமல் விவசாயிகள் இரவு முழுவதும் கண்விழித்துக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.  மின்சாரம் கிடைக்காததால் பயிர்களைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பகலில் 6 மணி நேரமும்,  இரவு 8 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.  எந்த நேரத்தில் மும்முனை மின்சாரம் கிடைக்கும் என்பதையும் மின் வாரியம் அறிவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com