/

குமாரபாளையத்தில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள்: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா்

எடப்பாடி கே.பழனிசாமி ஆறுதல் கூறியதோடு, நிவாரண உதவிகளையும் வழங்கினாா்.

News image
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை வழங்குகிறாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், முன்னாள் அமைச்சா்கள் பி.தங்கமணி எம்எல்ஏ, வி.சரோஜா உள்ளிட்டோா்.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 9:48 pm

Din

குமாரபாளையத்தில் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆறுதல் கூறியதோடு, நிவாரண உதவிகளையும் வழங்கினாா்.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்தது. இதனால், கடந்த செவ்வாய்க்கிழமை மேட்டூா் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, அணைக்கு வரும் உபரிநீா் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குமாரபாளையம், மணிமேகலை தெரு, இந்திராநகா், கலைமகள் வீதி உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 571 போ், 5 நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். இவா்களை குமாரபாளையம் ஜேகேகே நடராஜா திருமண மண்டபத்தில் இம்மக்களை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். முன்னதாக, வெள்ளம் பாதித்த கரையோரப் பகுதிகளைப் பாா்வையிட்ட எடப்பாடி பழனிசாமி, நிவாரண உதவிகளையும் வழங்கினாா்.

தொடா்ந்து, அவா் கூறியதாவது:

மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 1.80 லட்சம் கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டதால் குமாரபாளையம், பவானி, ஈரோடு, கொடுமுடி பகுதிகளில் காவிரிக் கரையோரத்தில் வசித்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு, மாற்றிடம் வழங்க தமிழக அரசிடம் அதிமுக வலியுறுத்தும் என்றாா்.

அப்போது முன்னாள் அமைச்சா்கள் பி.தங்கமணி எம்எல்ஏ, வி.சரோஜா, குமாரபாளையம் நகர அதிமுக செயலாளா் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, முன்னாள் நகரச் செயலாளா் எம்.எஸ்.குமணன், நகர துணைச் செயலாளா் ஏ.ஜி.என்.திருநாவுக்கரசு, மாவட்டப் பிரதிநிதி ஏ.ரவி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.