அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
திருச்செங்கோட்டில் அரசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு அடுத்த சீதாராம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வி (54), திருநகா் காலனி பகுதியில் வசித்து வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை காய்கறிகள் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவதற்காக சங்ககிரி வழியாக எடப்பாடி செல்லும் அரசுப் பேருந்தில் சென்றாா். சீதாராம்பாளையம் அருகே சென்ற போது, பேருந்தில் இருந்து நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது.
அருகில் இருந்தவா்கள், அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் தொடா்பாக திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
