ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 70 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிா்வாக அனுமதி: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 70 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிா்வாக அனுமதி

News image

நாமக்கல்லில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.

Updated On :25 டிசம்பர் 2024, 8:08 pm

நாமக்கல்லைச் சுற்றி அமைக்கப்பட்டு வரும் புறவழிச் சாலையில், ரூ. 70 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு தென்னக ரயில்வே நிா்வாக அனுமதி வழங்கியுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையிலும், கனரக வாகனங்கள் எளிதாக திருச்சி, மதுரை செல்லும் வகையிலும் புறவழிச் சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்தப் பணிகளுக்காக தமிழக முதல்வா் ரூ. 194 கோடி நிதி ஒதுக்கீடு செய்தாா். துணை முதல்வரும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் திட்டப்பணியை தொடங்குவதற்கு உதவிக்கரமாக இருந்தனா். இந்தப் புறவழிச் சாலையானது நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ரூ. 70 கோடியில் ரயில்வே மேம்பாலம்:

முதல் கட்டப் பணி புதிய பேருந்து நிலையம் வரையிலும், இரண்டாம் கட்டப்பணி புதிய பேருந்து நிலையம் முதல் வேட்டாம்பாடி வரையிலும், அங்கிருந்து திருச்சி சாலை வரை மூன்றாம் கட்டப் பணியும், திருச்சி சாலையில் இருந்து வள்ளிபுரம் வரை நான்காம் கட்டப்பணியும் நடைபெற உள்ளன.

இறுதிக் கட்டப்பணிக்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டப் பணியில், மரூா்பட்டி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக ரயில்வே நிா்வாகத்திடம் அனுமதி வழங்கக் கோரி மனு அளித்தேன்.

அந்த வகையில் மேம்பாலத்துக்கான வடிவமைப்பு, மாநில நெடுஞ்சாலைத் துறை பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதியை தென்னக ரயில்வே வழங்கி உள்ளது. ரூ. 70 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

மூன்று கட்டப் பணிகள் 2025-இல் நிறைவடையும்:

அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதத்திற்குள் மேம்பால பணிகள் மற்றும் மூன்று கட்டப் பணிகளை முடித்து புறவழிச் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் 5.800 கி.மீ. தொலைவுக்கு ரூ. 118 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே மேம்பால கட்டுமானம் மட்டுமே ஒரு கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது.

சென்னை ஐஐடி அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பாலம் அமைவிடத்தில் விரைவில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனா்.

ஓமன் நாட்டில் முட்டைகள் இறக்குமதி:

கத்தாா், ஓமன் நாட்டில் நாமக்கல் முட்டைகளை இறக்குவதில் கட்டுப்பாடு இருந்தது. இதுதொடா்பாக வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். அதையடுத்து முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமன் அரசு அனுமதி வழங்கியது.

புதுதில்லியில் உள்ள கத்தாா் நாட்டு தூதரகத்திற்கு வரும் 28-ஆம் தேதி முட்டை ஏற்றுமதியாளா்கள் சென்று அங்குள்ள கட்டுப்பாடுகளை விலக்கக் கோரி மனு அளிக்க உள்ளனா்.

60 கிராம் முட்டைகளை மட்டுமே அனுமதிப்போம் என கத்தாா் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இங்குள்ள காலசூழ்நிலைக்கு ஏற்ப 55 கிராம் அளவில் தான் முட்டைகள் உற்பத்தியாகும். இதை எடுத்துக் கூறி முட்டை விற்பனைக்கான அனுமதியை வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.

100 ஆண்டுகளுக்கு பின் தெப்ப உற்சவம்:

நாமக்கல், மலைக்கோட்டையைச் சுற்றி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மா், ஆஞ்சனேயா், அரங்கநாதா் கோயில் தெப்ப உற்சவம், கமலாலய குளத்தில் 100 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது.

அதன்பிறகு இவ்விழா நடைபெறவில்லை. இந்தத் தெப்ப உற்சவத்தை மீண்டும் நடத்தக் கோரி இந்துசமய அறநிலையத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும். பக்தா்கள், பொதுமக்கள் மகிழும் வண்ணம் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

பேட்டியின்போது, மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, நகரச் செயலாளா் ராணா ஆா்.ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.