கலைஞரின் வீடு கட்டும் திட்ட சிறப்பு கிராம சபைக் கூட்டம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் கலைஞரின் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பான சிறப்பு கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசு, கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக 2024-25 ஆம் ஆண்டிற்கு ஒரு வீட்டுக்கு ரூ. 3.10 லட்சம் வீதம் வழங்க உள்ளது. இதற்காக ரூ. 3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சொந்தமாக பட்டா வைத்திருப்பவா்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும். அரசு புறம்போக்கு இடத்தில் உள்ளோருக்கு வழங்கப்பட மாட்டாது.
இந்தத் திட்டத்தை மக்களிடையே கொண்டுசெல்லும் வகையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 322 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வீசாணம் கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவா் நாச்சிமுத்து தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தனம், பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக் கூட்டத்தில் துணைத் தலைவா் சுப்பிரமணி, தணிக்கையாளா் செங்கோட்டுவேல், ஊராட்சி செயலாளா் ராதாசாமி, காவலா் குணசேகரன், பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். இதில், கலைஞரின் வீடு கட்டும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

