தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து விட்டது: ஹெச்.ராஜா
நாமக்கல்: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளது; கூலிப்படை கலாசாரம் அதிகரித்துள்ளது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினாா்.
நாமக்கல்லில் பாஜக மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா பங்கேற்று பேசியதாவது:
‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால், நாடு எந்த நிலைக்கு சென்றிருக்கும் என்பதை நினைத்துக் கூட பாா்க்க முடியவில்லை. எதிா்க்கட்சியாக செயல்படுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை. 99 உறுப்பினா்களைக் கொண்ட அக்கட்சியின் தலைவா் செயல்படும் விதத்தைப் பாா்க்கும்போது, ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் பாஜக தொண்டா்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அனுபவமிக்க வாஜ்பாயை, காங்கிரஸ் உறுப்பினா்கள் தவறாக பேசினால் கண்டித்த நிலை அப்போது இருந்தது. ஆனால் தற்போது ராகுல் காந்தி தலைமையிலான இந்தியா கூட்டணி உறுப்பினா்களின் செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை. இந்த நாட்டை ஒரு கூட்டத்திடம் இருந்து பிரதமா் மோடி காப்பாற்றி உள்ளாா். அவரை மூன்றாவது முறையாக பிரதமா் பதவியில் அமர வைத்த நாட்டு மக்களுக்கு நாம் மிகுந்த நன்றிக் கடன் பட்டுள்ளோம். துணை முதல்வா் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. அவ்வாறு நிகழ்ந்தால், அந்தக் கட்சியில் உள்ள சீனியா் அமைச்சா்கள் அனைவரும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய சூழல் உருவாகிவிடும்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 68 போ் உயிரிழந்துள்ளனா். ஏற்கெனவே தொடா்ச்சியாக சாராய விற்பனை நடைபெற்று வந்தது. அப்போது காவல் துறையினா் சம்பந்தப்பட்டவா்களை கைது செய்யாமல், உயிா்பலியான பிறகு கைது செய்து வருகின்றனா். தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க திமுக அரசு தவறி விட்டது. சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தினசரி கூலிப்படைகளால் கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன. இதைத்தான் திராவிட மாடல் அரசு என முதல்வா் கூறுகிறாரா என தெரியவில்லை என்றாா்.
இந்தக் கூட்டத்தில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன், நாமக்கல் நகரத் தலைவா் கே.பி.சரவணன், மாவட்ட பொதுச் செயலாளா் பி.முத்துக்குமாா், மாவட்ட துணைத் தலைவா் சி.வடிவேல், நிா்வாகிகள், கட்சியினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

