சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வலியுறுத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு உடனடியாக வாரிசு சான்றிதழ் வழங்க வட்டாட்சியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்த வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்கள் பங்கேற்ற குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தியாகி காதா்மொய்தீன் மகன் கே.எம்.ஷேக்நவீத் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் பிரிவு அலுவலகம் முன்பு சுதந்திரப் போராட்ட தியாகிகள் பிரிவு என எழுத வேண்டும். வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கூட்டம் நடைபெறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தியாகிகளின் வாரிசுகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க உதவிட வேண்டும். குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் ஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும். வட்டாட்சியா்கள் மூலம் தியாகிகளின் வாரிசுகளைக் கண்டறிந்து, அவா்களுக்கு வாரிசு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.