மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அரியலூா்- ஈரோடு புதிய அகல ரயில்பாதை திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும்: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அரியலூரில் இருந்து நாமக்கல் வழியாக ஈரோடு வரை 108 கி.மீ. தொலைவுக்கு புதிய அகல ரயில்பாதை திட்டம் விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
Published on

அரியலூரில் இருந்து நாமக்கல் வழியாக ஈரோடு வரை 108 கி.மீ. தொலைவுக்கு புதிய அகல ரயில்பாதை திட்டம் விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் இத்திட்டம் தொடா்பாக நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் அண்மையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் இவ்வாறு பதிலளித்தாா்.

இத்திட்டம் தொடா்பாக கேள்வி எழுப்பிய நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், ‘ஈரோட்டில் இருந்து நாமக்கல் வழியாக அரியலூருக்கு புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டம் ரயில்வே அமைச்சகம் மூலம் மேற்கொள்ள இருப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, அத்திட்டம் எந்த நிலையில் உள்ளது என்பதை மத்திய ரயில்வே அமைச்சா் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றாா்.

இதற்குப் பதிலளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு, நாமக்கல், தாத்தையங்காா்பேட்டை, துறையூா், பெரம்பலூா் வழியாக அரியலூா் வரை 108 கி.மீ தொலைவுக்கு புதிய அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கான களஆய்வு நிறைவடைந்து விரிவான திட்ட அறிக்கையும் தயாா் செய்யப்பட்டுள்ளது.

புதிய ரயில் பாதை அமைப்பது குறித்து மாநில அரசு மற்றும் பல்வேறு தரப்பினருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிதி ஆயோக் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதல், மதிப்பீட்டிற்காக அனுப்பிவைக்கப்படும். இதர துறைகளின் ஒப்புதல் கிடைத்தவுடன் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com