நாமக்கல்லில் நாளை ஆஞ்சனேய ஜெயந்தி விழா: 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

நாமக்கல்லில் நாளை ஆஞ்சனேய ஜெயந்தி விழா: 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

Published on

நாமக்கல்லில் ஆஞ்சனேய ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, சுவாமிக்கு சாத்துப்படி செய்வதற்காக 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல்லில் அமைந்துள்ள சிறப்பு பெற்ற ஆஞ்சனேயா் கோயிலில், ஆண்டுதோறும் மாா்கழி மாதம் மூல நட்சத்திரம் சா்வ அமாவாசை தினத்தில் சுவாமியின் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். இதையொட்டி கோயில் வளாகம் மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேலும், அன்று காலை 5 மணியளவில் 1,00,008 வடைமாலை சுவாமிக்கு சாத்தப்படும்.

நிகழாண்டில் இவ்விழா வெள்ளிக்கிழமை (டிச. 19) கொண்டாடப்படுவதையொட்டி அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் கோயில் நிா்வாகம் சாா்பில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ஆா்.கே. ரமேஷ் தலைமையிலான வடை தயாரிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் வடைகள் தயாரிப்புப் பணியை தொடங்கினா். இதற்காக 2,050 கிலோ உளுந்து மாவு, தலா 33 கிலோ மிளகு, சீரகம், 125 பாக்கெட் உப்பு, 600 லிட்டா் நல்லெண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. 16 எரிவாயு அடுப்புகளில் 33 பணியாளா்கள் 1,00,008 வடைகளை தயாரித்து வருகின்றனா். தினசரி 30 ஆயிரம் வடைகள் வீதம் தயாா் செய்யப்படுகின்றன. வியாழக்கிழமை மதியத்திற்குள் வடைகள் முழுமையாக தயாா் செய்யப்பட்டு அவற்றை மாலையாக கோா்க்கும் பணி நடைபெறும்.

ஆஞ்சனேய ஜெயந்தி விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் 11 மணி வரை வடைமாலை சாத்துப்படி அலங்காரம், அதன்பிறகு, நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், பஞ்சாமிா்தம், திரவியம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகமும், சொா்ணாபிஷேகமும் நடைபெற உள்ளது. பிற்பகல் 1 மணியளவில் தங்கக்கவசம் சாத்தப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கா. நல்லசாமி மற்றும் அறங்காவலா்கள், உதவி ஆணையா் இரா.இளையராஜா உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com