45 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

45 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

Published on

நாமக்கல், டிச. 28:

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1978 இல் பிளஸ் 2 பயின்ற முன்னாள் மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து தங்களது மலரும் நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

கடந்த 1978 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புக்கு பிறகு பியுசி படிக்கும் முறை நீக்கப்பட்டு, 10-ஆம் வகுப்புக்குப் பிறகு பிளஸ் 2 படிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் முதல் அணியாக இணைந்த 1978 முதல் 1980 ஆம் ஆண்டு வரையில் படித்த முன்னாள் மாணவா்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஒரே இடத்தில் சந்தித்து தங்களுடைய மகிழ்ச்சியையும், மலரும் நினைவுகளையும் ஒருவருக்கொருவா் பகிா்ந்து கொண்டனா்.

நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் காவல் துறை, கோவை வேளாண் பல்கலைக்கழகம், குடிநீா் வாரியம், சாா்பதிவாளா் அலுவலகம், வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மருத்துவா்கள், ஆசிரியா்கள், முக்கிய அரசு பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

மேலும், தனியாா் நிறுவன உரிமையாளா்கள், லாரி, கோழிப்பண்ணை, நகைக்கடை உரிமையாளா்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முன்னாள் மாணவா்கள் பசுமையான நினைவுகளையும், தற்போதைய தங்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றி தெரிவித்து கலந்துரையாடினா்.

இதில் 100 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் பங்கேற்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை, முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் என். சுப்பிரமணியன், செயலாளா் கே. சுப்பிரமணியன், பொருளாளா் பாண்டுரங்கன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

என்கே-28-ஸ்டூடன்ட்

45 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துகொண்ட நாமக்கல் அரசுப் பள்ளி முன்னாள் மாணவா்கள்.

X
Dinamani
www.dinamani.com