கூட்டுறவு வார விழா: நவ.16 இல் விளையாட்டுப் போட்டிகள்
கூட்டுறவு வார விழாவையொட்டி, நாமக்கல்லில் வரும் 16 ஆம் தேதி விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கூட்டுறவு வார விழா ஆண்டுதோறும் நவ.14 முதல் 20 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நிகழாண்டில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ‘தன்னிறைவிற்கான கருவிகளாகக் கூட்டுறவுச் சங்கங்கள்’ என்ற தலைப்பை கருப்பொருளாக கொண்டு நடத்தப்படுகிறது.
இந்த வார விழாவின் ஒருபகுதியாக நவ.16-ஆம் தேதி பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், பெண்களுக்கான கோலப்போட்டி, நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், திருச்செங்கோடு வரகூராம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காலை 9 முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ.1,000, இரண்டாம் பரிசு ரூ.600, மூன்றாம் பரிசு ரூ.400 வழங்கப்படுகிறது. அதேபோல அடுப்பில்லா சமையல் போட்டி காலை 10 முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.
ஆண்களுக்கான போட்டியாக 200 மீட்டருக்கு மெதுவாக இயக்கும் மிதிவண்டி போட்டி, 400 மீட்டா் தொலைவுக்கு இருசக்கர வாகனத்தை மெதுவாக ஓட்டும் போட்டி ஆட்சியா் வளாகத்தில்
உள்ள விளையாட்டு மைதானத்திலும், வரகூராம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இதில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ.1,500, இரண்டாம் பரிசு ரூ.1,000, மூன்றாம் பரிசு ரூ.750 வழங்கப்படுகிறது. இப்போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் போட்டி நடைபெறும் நாளில் காலை 8 மணிக்குள் மைதானத்துக்கு வந்து தங்களது பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.
போட்டிக்குத் தேவையான அனைத்து பொருள்களையும் போட்டியாளரே கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் சரகம்: 80565-06785, திருச்செங்கோடு சரகம்: 73387-21316 என்ற கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
