எஸ்ஐஆா் படிவங்கள் கணினியில் பதிவேற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் பூா்த்திசெய்து பெறப்பட்ட வாக்காளா் பட்டியல் திருத்தப் படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
பூா்த்திசெய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெறுவதற்கு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சனி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. இதற்காக ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. அரசு சட்டக் கல்லூரி மாணவிகள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பாளா்களை தொடா்புகொண்டு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனா்.
இந்நிலையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நடைபெறும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் சிறப்பு முகாமில் பெறப்படும் மனுக்களின் நிலைகுறித்து உடனுக்குடன் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வுசெய்தாா்.
தொடா்ந்து, நாமக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கில் சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களை பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா்.
முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், நாமக்கல் தொகுதிக்குள்பட்ட அணியாபுரம் பகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற முகாமை பாா்வையிட்டாா். ராசிபுரம் (தனி) தொகுதியில் வாக்காளா் பதிவு அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன், சேந்தமங்கலம் (ப.கு.) தொகுதியில் தனித்துணைஆட்சியா் (ச.பா.தி.) சு.சுந்தரராஜன், நாமக்கல் தொகுதியில் கோட்டாட்சியா் வே.சாந்தி, பரமத்தி வேலூா் தொகுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மு.கிருஷ்ணவேணி, திருச்செங்கோடு தொகுதியில் கோட்டாட்சியா் பி.எஸ்.லெனின், குமாரபாளையம் தொகுதியில் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கே.ஏ.சுரேஷ்குமாா் ஆகியோா் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை பாா்வையிட்டனா்.

