கொல்லிமலையில் பழங்குடியினா் ஆா்ப்பாட்டம்
கொல்லிமலை வனப்பகுதியில் வேளாண் பணிகளை மேற்கொள்ள பழங்குடியின மக்களுக்கு அனுபவ பட்டா வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், தேவனூா் நாடு சூழவந்திப்பட்டி கிராமத்தில் வரகு, சாமை, திணை உள்ளிட்ட சிறுதானியங்களை, அப்பகுதியில் உள்ள பழங்குடியின விவசாயிகள், அங்குள்ள வனத்தில் பல தலைமுறைகளாக பயிரிட்டு வருகின்றனா். அந்த அனுபவ நிலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு சில்வா் ஓக் மரக்கன்றுகளும் நட்டு வளா்த்தனா்.
இந்த நிலையில், நடப்பட்ட சில்வா் ஓக் மரங்களை வனத் துறையினா் அகற்றினா். 2006 வன உரிமைச் சட்டப்படி அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கொல்லிமலை வட்டாரக் குழு செயலாளா் தங்கராஜ் தலைமையில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், வனத் துறையைக் கண்டித்தும், வனத்தில் வேளாண் பணிகள் மேற்கொள்ள அனுபவ பட்டா வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், கொல்லிமலை பழங்குடியின மக்கள் பலா் கலந்துகொண்டனா்.

