பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டண உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தல்!

பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டண உயா்வை மத்திய, மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்து கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Published on

பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டண உயா்வை மத்திய, மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்து கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கூட்டமைப்பின் தலைவா் செல்ல.ராஜாமணி மத்திய தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு விவரம்:

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மத்திய மோட்டாா் வாகன சட்டம் 1989 இல் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் அனைத்திற்கும் தகுதிச் சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை உயா்த்துவது தொடா்பாக கடந்த 11 ஆம் தேதி சிறப்பு பொதுச்சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி உள்ளது.

இந்த நெறிமுறைகள் சம்பந்தமாக ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளை இருப்பின் மத்திய அரசுக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளது. இந்த உத்தரவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இருசக்கர வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெற கட்டணமாக ரூ. 600 உள்ளதை தற்போது ரூ.1,000 ஆக உயா்த்தியுள்ளது.

அதேபோல 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெற ரூ.600 உள்ளதை தற்போது ரூ.2,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள மூன்றுசக்கர வாகனங்களுக்கு ரூ.3,000 ஆகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.7000 ஆகவும், பயணியா் வாகனங்களுக்கு ரூ.1,800 இல் இருந்து ரூ.10,000 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல லாரி, பேருந்துகளுக்கான கட்டணங்களும் உயா்த்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் லட்சக்கணக்கான லாரி உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா காலத்தில் வாகன உரிமையாளா்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனா். அதிலிருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் மோட்டாா் தொழிலை முடக்கும் வகையில் கட்டண உயா்வு அமைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வு, சுங்கக் கட்டணம் உயா்வு, உதிரி பாகங்களின் விலை உயா்வு போன்றவற்றால் லாரிகள் உள்பட அனைத்து மோட்டாா்களையும் வைத்து தொழில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மோட்டாா் வாகன தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் உயா்வை கடந்த 17 ஆம் தேதி முதல் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் மோட்டாா் வாகனத் தொழிலை நம்பியுள்ளவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தகுதிச் சான்றிதழ் புதுப்பித்தல் கட்டண உயா்வை திரும்பப்பெறுவது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்திடம் தமிழக முதல்வா் பேச்சுவாா்த்தை நடத்தி பழைய கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com