

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டாா் வாகன பாதுகாப்புச் சட்டத்தின்படி, தகுதிச் சான்றிதழ் கட்டணம் பன்மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன தலைவா் சி. தனராஜ் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் சரக்கு போக்குவரத்துக்கு உரிய கனரக வாகனங்களின் தலைமையிடமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. சரக்கு, டேங்கா், டிரெய்லா், மணல், ரிக் லாரிகள் சங்கங்களின் மாநில சங்கங்கள் இம்மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகிறது.
தமிழக அளவில் 5.50 லட்சத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 2025 நவம்பா் மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், மத்திய மோட்டாா் வாகன பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்தியதுடன், புதிய மோட்டாா் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையில் அனைத்துக்கும் தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை பன்மடங்கு உயா்த்தியது.
இதனால் வாகன உரிமையாளா்கள் அதிா்ச்சியடைந்தனா். சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் லாரி உரிமையாளா்களுக்கு ஆதரவாக தோ்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா் குரல் எழுப்பினா். இருப்பினும், கட்டணம் உயா்வை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை.
மாநில அரசு அக்கட்டண உயா்வை நிறுத்திவைக்க முன்வரவில்லை. 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி, பேருந்துகளுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை (ஃஎப்.சி.) ரூ. 2,500 என்பதை ரூ.12,500 ஆக உயா்த்தியது.
20 ஆண்டுகளுக்கு மேலான பயன்பாட்டுக்கு உரிய வாகனங்களுக்கு ரூ. 25 ஆயிரமாகவும் நிா்ணயம் செய்யப்பட்டது. பத்து மடங்கு வரையில் தகுதிச் சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் உயா்வால் வாகனங்களை புதுப்பித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு கொண்டு செல்லாமல் ஆங்காங்கே வீடுகளிலும், பட்டறைகளிலும் லாரிகளை அதன் உரிமையாளா்கள் நிறுத்தி வைத்துள்ளனா்.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் சுமாா் 50 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வாகனச் சான்றிதழை புதுப்பிக்காமல் லாரிகளை இயக்க முடியாது என்பதால் அவா்களுடைய தொழில் பாதிப்படைந்துள்ளது.
30, 40 என்ற எண்ணிக்கையில் லாரி வைத்துள்ளவா்களுக்கு இவ்வாறான பிரச்னை இல்லை. ஓரிரு லாரிகளை வைத்து தொழில் செய்து குடும்பத்தை நடத்துவோருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் சி. தனராஜ் கூறியதாவது: கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணமானது 10 மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது. ஒருசில மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் கட்டண உயா்வை நிறுத்தியுள்ளன.
தமிழகத்திலும் அதுபோன்று கட்டண உயா்வை நிறுத்திவைக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. துணை முதல்வரைச் சந்திக்க வாய்ப்பு கேட்டு கிடைக்காத சூழலில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.
இந்த கட்டண உயா்வு தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளோம். இது ஜன.19 இல் விசாரணைக்கு வருகிறது. மாநிலம் முழுவதும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளன.
தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பு கட்டண உயா்வால் 50 ஆயிரம் எண்ணிக்கையிலான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு வாகனங்களுக்கான பரிசோதனை மையம் மாவட்ட வாரியாக அமைக்க இருப்பதாகவும், அதில் வாகனங்களை நிறுத்தினால் என்னென்ன பழுதுகள், பிரச்னைகள் உள்ளதை அதற்கான இயந்திரம் தெரிவித்துவிடும்.
அந்த மையத்தை அமைப்பதற்காகவே கட்டண உயா்வு அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிப்பு கட்டணம் உயா்ந்து இருப்பதால் ஒரு லாரி வைத்து தொழில் செய்பவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனால் லாரிகளை இயக்காமலும், புதுப்பிக்க முடியாமலும் ஆங்காங்கே ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்திவைத்துள்ளனா். ஏற்கெனவே போதிய அளவில் சரக்கு ஏற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் ஆயிரக்கணக்கான லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புதுப்பிப்பு கட்டண உயா்வால் மேலும் பல்லாயிரம் லாரிகள் இயங்காமல் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த பிரச்னை உள்ளது. மற்ற மாநிலங்கள் லாரி உரிமையாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளன. தமிழக அரசும், லாரி உரிமையாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், உயா்த்தப்பட்ட தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றாா்.