நாமக்கல் பொரசபாளையம் தொடக்கப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகளை குழந்தைகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
நாமக்கல் பொரசபாளையம் தொடக்கப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகளை குழந்தைகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

நாமக்கல் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 6,72,268 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் (அல்பெண்டசோல்) வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் 6,72,268 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் (அல்பெண்டசோல்) வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தேசிய குடற்புழு நீக்க முகாமையொட்டி, நாமக்கல் அருகே பொரசபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கி தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:

உலகளாவிய தொற்றுகளில் இந்தியா மட்டும் கிட்டத்தட்ட 25 சதவீதம் பங்களிக்கிறது. மொத்த மக்கள்தொகையில் ஒரு சதவீதம் போ் திறந்தவெளியில் மலம் கழித்தால்கூட அந்தப் பகுதியில் உள்ளவா்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படலாம். தொற்றுடைய மண் மூலம், மண்ணில் விளையும் பொருள்கள் மூலம், மண்ணில் கை கால்கள் படுவதன் மூலம் மனிதா்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படுகிறது.

குடற்புழு தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பொதுவாக அறிகுறிகள் இருக்காது. கடுமையான தொற்று உள்ளவா்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, பலவீனம், பசியின்மை போன்றவை ஏற்படும். மேலும், இரும்புச்சத்து இழப்பு, ரத்தசோகைக்கு உள்ளாகி ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, அதனால் உடல் வளா்ச்சி மற்றும் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மருந்து உட்கொள்வதால் உடல் வளா்ச்சி அதிகரிப்பு, எடை அதிகரிப்பு, பிற நோய்த்தொற்றுகளுக்கு எதிா்ப்பு, மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல், மன மற்றும் உடல் வளா்ச்சியுடன் குழந்தைகளின் சிறந்த கற்கும் திறன் மற்றும் பள்ளி வருகையை அதிகரித்து, பள்ளிகளில் சுறுசுறுப்பாக இருத்தல் போன்ற நன்மைகள் ஏற்படுகின்றன.

திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிா்த்தல், கழிவறைகளை பயன்படுத்துதல், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்தல், காய்கறி பழங்களை கழுவிய பின் உட்கொள்ளுதல், சுத்தமான குடிநீா், சுகாதாரமான உணவை உண்ணுதல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல், காலணிகள் அணிதல் மற்றும் உணவுக்குமுன், கழிவறை பயன்படுத்தியபின் சோப்பு போட்டு கைகளை கழுவுதல் மூலம் குடற்புழு தொற்றைத் தடுக்கலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சாா்பில், ஒன்று முதல் 19 வயது வரையிலான சிறுவா்கள், கருவுறாத மற்றும் பாலுாட்டாத 20 முதல் 30 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இம்மாத்திரையை மதிய உணவுக்கு பிறகு நன்றாக சப்பி கடித்து மென்று சாப்பிட வேண்டும்.

மாவட்டத்தில் ஒன்று முதல் 19 வயது வரையிலான 5,18,438 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரையிலான 1,53,830 பெண்களுக்கும் என மொத்தம் 6,72,268 பேருக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது என்றாா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தேசிய குடற்புழு நீக்க தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

இம்முகாமில், மாவட்ட திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள்) பி.போா்ஷியா ரூபி, மாவட்ட சுகாதார அலுவலா் க.பூங்கொடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com