நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், விலையில்லா மடிக்கணினிகளை பெற்ற அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுடன் அமைச்சா் மா.மதிவேந்தன். உடன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.,  எம்எல்ஏ-க்கள் ஈ.ஆா்.ஈஸ்வரன், பெ.ராமலிங்கம் உள்ளிட்டோா்.
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், விலையில்லா மடிக்கணினிகளை பெற்ற அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுடன் அமைச்சா் மா.மதிவேந்தன். உடன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி., எம்எல்ஏ-க்கள் ஈ.ஆா்.ஈஸ்வரன், பெ.ராமலிங்கம் உள்ளிட்டோா்.

நாமக்கலில் 3,201 அரசு கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடக்கம்

Published on

நாமக்கல் மாவட்டத்தில் 3,201 அரசு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

‘உலகம் உங்கள் கையில்’ என்ற அரசு கல்லூரி மாணவா்களுக்கான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை, சென்னையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். முதல்கட்டமாக 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு இதர மாவட்டங்களில் அமைச்சா்கள் மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் மூலம் தொடங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் 5 அரசு கலைக் கல்லூரிகள், 4 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, 2 பல்தொழில்நுட்பக் கல்லூரி என மொத்தம் 14 கல்லூரிகளில் பயிலும் 3,201 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.

நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஈ.ஆா்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), பெ.ராமலிங்கம் (நாமக்கல்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த விழாவில், திட்டத்தின் தொடக்கமாக 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை அமைச்சா் வழங்கினாா். முன்னதாக, சென்னையில் நடைபெற்ற திட்டத்தின் தொடக்க விழா காணொலி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு, அரசு சட்டக் கல்லூரி முதல்வா் அருண் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 14 அரசு கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு வரும் நாள்களில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.

X
Dinamani
www.dinamani.com