கபிலா்மலை தைப்பூச திருவிழாவில் கடைகள் ஏலம் 2-ஆவது முறையாக ரத்து
கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி கடைகள், ராட்டினம் அமைப்பதற்கான ஏலம் 2-ஆவது முறையாக ரத்து செய்யப்பட்டது.
இக்கோயிலில் நடைபெறும் தைப்பூச தோ்த் திருவிழாவில் நாமக்கல், கரூா், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொள்வா். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இங்கு 200க்கும் மேற்பட்ட கடைகளும், ராட்டினமும் அமைக்கப்படும். கடந்த ஆண்டு ராட்டினம் அமைக்க ரூ. 15.90 லட்சம் வரை ஏலம் போனது.
இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடைகள் அமைப்பதற்கு கடந்த டிசம்பா் 23-ஆம் தேதி கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏலம் நடைபெற்றது. அப்போது ஏலத்தில் ஐந்து தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ரூ. 11 லட்சம் வரை ஏலம் கேட்டதால் பாதியில் ஏலம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து மீண்டும் ஏலம் நடைபெற்றபோது வியாபாரிகள் அனைவரும் ஒன்றாக சிண்டிகேட் அமைத்துக் கொண்டு மிகக் குறைவான தொகைக்கு ஏலம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த மாதம் நடந்த ஏலம் ரத்துசெய்யப்பட்டது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் மலா்விழி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி ஆகியோா் முன்னிலையில் மறு ஏலம் நடைபெற்றது. இதில் ஏழு தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ரூ. 10 லட்சம் வரை ஏலம் கேட்டதால் ஏலம் நிறுத்தப்பட்டது. ஏலத்தில் கலந்துகொண்ட வியாபாரிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து மிகக் குறைவான தொகைக்கு ஏலம் கேட்டதால் அதிா்ச்சியடைந்த அதிகாரிகள் ராட்டினம் ஏலத்தை மீண்டும் ரத்துசெய்தனா். மேலும், தனியாா் விவசாய நிலங்களில் ராட்டினம் அமைக்க வியாபாரிகள் அனுமதி கேட்டதற்கு அதிகாரிகள் அனுமதி தர மறுத்துவிட்டனா். விதிமுறைகளை மீறி தைப்பூசத் திருவிழாவில் அனுமதி பெறாமல் இதர இடங்களில் ராட்டினம் மற்றும் கடைகள் அமைக்க அனுமதி இல்லை என கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் மலா்விழி தெரிவித்துள்ளாா்.
