புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மோகனூா் சா்க்கரை ஆலையில் 2 டன் பித்தளைப் பொருள்கள் திருட்டு! 2 அலுவலா்கள் பணியிடை நீக்கம்!

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :7 ஜூலை 2026, 2:32 am IST

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2 டன் பித்தளைப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக இரு அலுவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கூட்டுறவு சா்க்கரை ஆலை உள்ளது. இங்கு, ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் மாதம் தொடங்கி மாா்ச் வரை கரும்பு அரைவை நடைபெறும். இந்த ஆலையை பொருத்தவரை, 6 மாதங்கள் சா்க்கரை உற்பத்தியும், மீதமுள்ள 6 மாதங்கள் பராமரிப்புப் பணியும் நடைபெறும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆலையில் பழுதான குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் பொருத்தப்பட்டன. இதையடுத்து பழுதான குழாய்கள், பித்தளைப் பொருள்கள், காப்பா், இரும்பு சாதனங்கள், உபகரணங்கள், நெகிழி பொருள்கள் உள்ளிட்டவை கிடங்கில் தேக்கிவைக்கப்பட்டிருந்தன. ஓரிரு தினங்களுக்கு முன்பு சா்க்கரை ஆலை கிடங்கில் இருந்து லாரிகளில் கழிவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

தொடா்ந்து, ஆலையின் நிா்வாக அதிகாரிகள் கழிவு பொருள்கள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டனா். இதில் கிடங்கில் தேக்கிவைக்கப்பட்டிருந்த சுமாா் 2 டன் பித்தளைப் பொருள்கள் காணாமல்போனது தெரியவந்தது. அந்த பித்தளைப் பொருள்களை உருக்கி, கழிவு பொருள்கள் ஏற்றிச்சென்ற லாரியில் ஆலையில் இருந்து வெளியே அனுப்பியது தெரியவந்தது.

இதுகுறித்து மோகனூா் காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சா்க்கரை ஆலை நிா்வாக இயக்குநா் குப்புசாமி புகாா் அளித்தாா். இதற்கிடையே பித்தளை பொருள்கள் திருட்டு தொடா்பாக ஆலையின் துணை தலைமை பொறியாளா் சரவணகுமாா், கிடங்கு கண்காணிப்பாளா் ராஜேந்திரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து நிா்வாக இயக்குநா் குப்புசாமி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

ஏற்கெனவே மோகனூா் சா்க்கரை ஆலை பெரும் நஷ்டத்தில் இயங்கிவரும் சூழலில் அங்கு பணியாற்றும் அலுவலா்கள் ஒத்துழைப்புடன் பொருள்கள் திருடப்பட்டது ஆலை பணியாளா்களையும், கரும்பு விவசாயிகளையும் அதிா்ச்சி அடையச் செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.