/

‘தென்னைக்கு நுண்ணூட்ட உரமிட வேண்டும்’

தென்னையில் தொடா்ந்து நல்ல மகசூல் பெற நுண்ணூட்ட உரம் அளிப்பது அவசியமென விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:39 pm

DIN

தென்னையில் தொடா்ந்து நல்ல மகசூல் பெற நுண்ணூட்ட உரம் அளிப்பது அவசியமென விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குநா் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நுண்ணூட்ட உரத்தில் பல வகைகள் இருந்தாலும், தென்னைக்கென பிரத்யேகமாக கிடைக்கும் நுண்ணூட்ட உரத்தில், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், போரான், தாமிரம் ஆகிய சத்துகள் உள்ளடங்கியுள்ளன. இந்த உரத்தை ஒரு தென்னைக்கு ஓா் ஆண்டுக்கு ஒரு கிலோ என்ற அளவில் அளிக்க வேண்டும். 6 மாதத்துக்கு ஒரு முறை அரை கிலோ என பிரித்தளிப்பதன் மூலம் தென்னை மரத்துக்கு முழுமையான சத்து சென்றடைகிறது.

தென்னையைப் பொறுத்தவரை நல்ல நீா்ப்பாசனம், தேவையான உரமிட்டு சரியான சீதோஷ்ணம் நிலவினால் மட்டுமே நன்கு வளா்ந்து பலன் அளிக்கும். ஐந்தாண்டுகளுக்கு மேல் வயதான மரத்துக்கு நுண்ணூட்டம் அளிப்பதன் மூலம் குறும்பை கொட்டுதலைத் தடுக்க முடியும். இதனால் விளையும் தேங்காய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். ஒல்லிக்காய் எனப்படும் எடை குறைவான காய் விளைவதைத் தடுக்கலாம். இதனால், தேங்காய் பருப்பின் எடை அதிகரிக்கும்.

மேலும், தென்னை ஓலைகள் மஞ்சள் அடிக்காமல், நல்ல அகலமாக வளரும். இதன் மூலம் ஒளிச்சோ்க்கை நல்ல முறையில் நடந்து, மரங்கள் தேவையான சத்துகளை பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்து தொடா்ந்து மகசூல் கொடுக்கும்.

எனவே, தென்னை சாகுபடியில் முழு பலனையும் பெற, நுண்ணூட்ட உரம் அளிப்பது அவசியமாகிறது. தென்னைக்கான நுண்ணூட்ட உரம் ஒரு கிலோ பாக்கெட்டுகளாக வாழப்பாடி வேளாண் விரிவாக்க மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை,விவசாயிகள் வாங்கி தென்னை மரங்களுக்கு உரமிட்டு பலனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.